கோவையில் புதிய தகவல் தொழில்நுட்ப வளாகம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்..!

Scroll Down To Discover
Spread the love

கோவை விளாங்குறிச்சியில் புதிய தகவல் தொழில்நுட்ப வளாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

 

 

தமிழ்நாடு அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் நலத்திட்ட பணிகள் மக்களை முழுமையாக சென்றடைகிறதா? என மாவட்ட வாரியாக சென்று கள ஆய்வு செய்ய உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி தனது முதல் கள ஆய்வினை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.5) கோவையில் தொடங்கினார். இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.5) காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.

அங்கு அவருக்கு, அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து காரில் விளாங்குறிச்சிக்கு சென்றார். அங்குள்ள தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் எல்காட் நிறுவனம் சார்பில் 3.94 ஏக்கர் பரப்பளவில், ரூ.114.16 கோடியில் 8 தளங்களுடன் புதிதாக தகவல் தொழில்நுட்ப கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது.

அந்த கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, செந்தில்பாலாஜி, பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா மற்றும் தலைமை செயலாளர் முருகானந்தம், கோவை தொகுதி எம்.பி. கணபதி ராஜ்குமார், கலெக்டர் கிராந்திகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து, சுகுணா திருமண மண்டபத்தில், முதலமைச்சர் முன்னெடுப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் நில எடுப்பில் இருந்து நிலங்கள் விடுவிக்கப்பட்டதற்கான ஆணைகளை அந்த நில உரிமையாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தொடர்ந்து, மாலை 4 மணியளவில் போத்தனூர் பி.வி.ஜி. திருமண மண்டபத்தில் நடைபெறும் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். அதில் 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை வழங்க உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி கோவையில் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.