திருப்பதி கோயிலில் பக்தர்களுக்கு மன வருத்தம் ஏற்படும் வகையில் பிராங்க் வீடியோ … மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டிடிஎஃப் வாசன் , அஜீஸ் – தேவஸ்தானம் கண்டனம்..!

Scroll Down To Discover
Spread the love

டிடிஎப் வாசனும், அஜீஸ் அவரது நண்பர்களும் திருப்பதி பக்தர்களை ஏமாற்றி வெளியிட்ட பிராங்க் வீடியோ எடுத்தது தற்போது சர்ச்சையாகி உள்ளது.

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து, மணிக்கணக்கில் காத்திருந்து சாமி தரிசனம் பெற்று செல்கின்றனர். தற்போது வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் உள்ள 32 அறைகளிலும் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், யூடியூபர் டிடிஎப் வாசனும் அவரது நண்பர்களும் ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்களிடம்தான் ப்ராங்க் வீடியோ எடுத்து சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.  சர்ச்சைகளுக்கு பெயர்போன டிடிஎப் வாசன், அவருடைய நண்பர் அஜீஸ் உட்பட சிலர் சேர்ந்து திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளனர்.  அங்கு ஏழுமலையான் தரிசனத்திற்காக வைகுண்ட மண்டபத்தில் இருந்த பக்தர்கள் எப்போது நமக்கு ஏழுமலையான வழிபட வாய்ப்பு கிடைக்கும் என்ற ஏக்கத்துடன் நீண்ட நேரம் காத்திருந்துள்ளனர்.

அப்போது அறையின் கதவை திறந்து விடும், தேவஸ்தான ஊழியர் போல அஜீஸ் சென்று, காத்திருப்பு அறையின் கதவு பூட்டை திறந்து விடுவதுபோல பாவலா செய்கிறார். உடனே, ஏழுமலையானை வழிபட நமக்கு நேரம் வந்துவிட்டது என்ற ஆனந்த களிப்பில் பக்தர்கள் கோவிந்தா! கோவிந்தா!! என்று கோஷம் எழுப்புகின்றனர். ஆனால் கதவுகள் திறக்கப்படாமல் இருக்க, நீண்ட நேரம் காத்திருந்த பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து வேதனையில் மீண்டும் அமருகின்றனர்.

அப்போது அவர்களை ஏமாற்றிய அஜீஸ் அங்கிருந்து சிரித்துக் கொண்டே ஓடுகிறார். இவற்றை வீடியோ எடுத்து tirupathi Funny video என்ற பெயரில் இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட்டு இருக்கிறார் டிடிஎப் வாசன். திருப்பதி மலையை அடையும் பக்தர்கள் அனைவரும் எங்களுடைய தேவஸ்தான பக்தர்கள். அவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுப்பது எங்களுடைய முழு கடமை.  பக்தர்களை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது, அப்படி செய்தால் கடும் நடவடிக்கை எடுப்போம் என்பது தேவஸ்தானத்தின் அடிப்படை கொள்கை.

இந்த நிலையில் சாமி தரிசனத்திற்காக மணி கணக்கில் காத்திருந்த பக்தர்களை ஏமாற்றி Funny video வெளியிட்ட டிடிஎஃப் வாசன் மற்றும் அஜீஸ் மீது தேவஸ்தான நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்க இருக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க முடியும். மேலும் பலமான பாதுகாப்பு கெடுபிடிகளை மீறி கோவிலுக்குள் செல்போன் எடுத்து சென்றது எப்படி? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

திருப்பதியில் இதற்கு முன் செல்போனை தன்னுடைய உடலில் மறைத்து ஏழுமலையான் கோவில் உட்பகுதி வரை எடுத்துச் சென்று வீடியோ பதிவு செய்தார் ஒரு ஆந்திர பக்தர். அவரை தேவஸ்தான நிர்வாகம் கடுமையாக தண்டித்து போலீசில் ஒப்படைத்து சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது. வைகுண்ட காத்திருப்பு மண்டபத்தில் ப்ராங்க் வீடியோ எடுத்த டிடிஎப் வாசன், அஜீஸ் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பதி திருமலை தேவஸ்தானம் கண்டனம்

இப்படி, சாமி தரிசனத்திற்காக மணிக்கணக்கில் காத்திருந்த பக்தர்களை ஏமாற்றி பிராங்க் வெளியிட்ட டி.டி.எஃப் வாசன் மற்றும் அவரது குழுவினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பதி திருமலை தேவஸ்தானம் எச்சரித்துள்ளது