இந்தியாவில் தயாரிக்கடும் பாராசிட்டமால் உட்பட  52 மருந்துகள் தரமற்றவை – CDSCO நடத்திய பரிசோதனையில் தகவல்..!

Scroll Down To Discover
Spread the love

மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம் [CDSCO] கடந்த மே மாதம் நடத்திய பரிசோதனையில் இந்தியாவில் தயாரிக்கடும் பாராசிட்டமால் உட்பட  52 மருந்துகள் தரமற்றவை என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த 50 மருந்துகளில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் காய்ச்சல் மருந்தான பாராசிட்டமால், வயிறு சம்பந்தமான அசௌகரியங்களுக்கு உட்கொள்ளப்படும் பென்டோபிரசோல் மற்றும் முன்னணி ஆன்டிபயாட்டிக் மருந்துகளும் உள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுதவிர்த்து வைட்டமின், கால்சியம் சத்துக்கான மாத்திரைகள், மன அழுத்தம் மற்றும் ஹைப்பர் டென்ஷனுக்கு பரிந்துரைக்கப்படும் மாத்திரைகள், ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச நோய்களுக்கு வழங்கப்படும் மாத்திரைகளும் இதில் அடங்கும். இந்த தரமற்ற 52 மருந்துகளில் அதிகபட்சமாக 22 மருந்துகள் இமாச்சலப் பிரதேசத்தில் தயாரிக்கப்படுகின்றன.

இதுதவிர்த்து ஜெய்ப்பூர், ஹைதராபாத், குஜராத், அந்திரப்பிரதேசம், இந்தோர் ஆகிய இடங்களில் மீதமுள்ள மருந்துகள் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கும், மருந்தகங்களுக்கும் விநியோகிக்கப்படுகின்றன.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு மருந்து கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் ஏற்கனவே சந்தையில் உள்ள இந்த 52 மருந்துகளை திரும்பப்பெறும் நடவடிக்கையும் முடுக்கி விடப்பட்டுள்ளது. கடந்த வருடம் இமாச்சலப் பிரதேசத்தில் மட்டுமே தயாரிக்கப்பட்ட 120 மருந்துகள் தரமற்றவை என்று கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.