ரூ.4 கோடி பணம் பறிமுதல் – 10 நாள் அவகாசம் கோரி நயினார் நாகேந்திரன் கடிதம்

Scroll Down To Discover
Spread the love

ரூ.4 கோடி பணம் பறிமுதல் தொடர்பாக பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் இன்று (ஏப்.22) போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை. விசாரணைக்கு ஆஜராக 10 நாட்கள் அவகாசம் கேட்டு வழக்கறிஞர் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.

தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர்கள் உள்ளிட்ட மூவரிடம் ரூ.3.99 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து, நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.

விசாரணையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள உணவு விடுதியில் இருந்து அதிகபணம் கைமாறியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உணவு விடுதி இருக்கும் கட்டிடம் பாஜக தொழில் துறைப் பிரிவு தலைவரான கோவர்த்தனனுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. அங்கும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டு, ரூ.1.10 லட்சம் ரொக்கத்தைக் கைப்பற்றினர்.

இது தொடர்பாக விசாரிக்க நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீஸார் சம்மன் அனுப்பிய நிலையில், நயினார் நாகேந்திரன் இன்று போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை. விசாரணைக்கு ஆஜராக 10 நாட்கள் அவகாசம் கேட்டு வழக்கறிஞர் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், “தேர்தல் பணி, சொந்த பணி காரணமாகவும் 10 நாட்கள் அவகாசம் வேண்டும். 10 நாட்களுக்கு பிறகு விசாரணைக்கு ஆஜராகிறேன்.” என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.