கர்நாடக டி.ஜி.பி பிரவீன் சூட்- சி.பி.ஐ., இயக்குநராக நியமனம்..!

Scroll Down To Discover
Spread the love

சி.பி.ஐ., இயக்குநராக பிரவீன் சூட் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது கர்நாடக டி.ஜி.பி.,யாக இருக்கும் அவர், 2 ஆண்டுகள் புதிய பதவியில் நீடிப்பார்.

தற்போது சி.பி.ஐ. இயக்குநராக உள்ள சுபோத் குமார் ஜெயிஸ்வாலின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில், புதிய சி.பி.ஐ. இயக்குநரைத் தேர்வு செய்வதற்கான கூட்டம், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது.

பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திர சூட் மற்றும் மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் மூன்று மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளை பிரதமர் தலைமையிலான குழு பரிந்துரைச் செய்திருந்தது. இந்நிலையில், கர்நாடகா மாநில காவல்துறை டி.ஜி.பி.யாக உள்ள பிரவீன் சூட்டை புதிய சி.பி.ஐ. இயக்குநராக நியமித்து மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து ஒரே நாளே ஆகும் நிலையில், அம்மாநிலத்தின் டி.ஜி.பி.யாக உள்ளவர் சி.பி.ஐ. இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.