நிதி நெருக்கடியால் திவால் நிலையில் கோ பர்ஸ்ட் நிறுவனம் : 2 நாள் விமானங்கள் ரத்து… நோட்டீஸ் அனுப்பிய டிஜிசிஏ ..!

Scroll Down To Discover
Spread the love

மும்பையை தலைமையிடமாக கொண்ட கோ பர்ஸ்ட் விமான நிறுவனம் குறைந்த கட்டண விமான சேவைக்கு பெயர்பெற்ற நிறுவனமாகும். சமீப காலமாக என்ஜின் பழுது காரணமாக விமானங்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது. மொத்தம் உள்ள 59 விமானங்களில் தற்போது 25 விமானங்கள் இயக்கப்படாமல் உள்ளன.

இதனால் நிறுவனத்தின் வருமானம் வெகுவாக குறைந்து நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் திவால் தீர்மானத்துக்கான விண்ணப்பம் கொடுத்துள்ளது.

இந்நிலையில், கடும் நிதி நெருக்கடி காரணமாக மே 3 மற்றும் மே 4 ஆகிய இரண்டு நாட்களுக்கு விமான சேவையை நிறுத்துவதாக கோ பர்ஸ்ட் விமான நிறுவனம் இன்று அதிரடியாக அறிவித்துள்ளது. இதனால் அந்த விமானத்தில் பயணிக்க முன்பதிவு செய்துள்ள பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுதொடர்பாக விளக்கம் கேட்டு கோ பர்ஸ்ட் நிறுவனத்துக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) நோட்டீஸ் அனுப்பி உள்ளது. திட்டமிடப்பட்ட அனைத்து விமானங்களையும் எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் ரத்து செய்துள்ளதாகவும், இது தொடர்பாக 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘கோ பர்ஸ்ட் நிறுவனம் திட்டமிடப்பட்ட விமான சேவைகளை வழங்க தவறியதால், பயணிகளின் சிரமத்திற்கு வழிவகுத்தது.

இது விதிமுறைகளை மீறிய செயல் ஆகும். இதற்காக விமான நிறுவனத்திற்கு எதிராக ஏன் தகுந்த நடவடிக்கை எடுக்கக்கூடாது? மே 3 மற்றும் 4ம் தேதிகளுக்கான விமானங்களில் பயணிக்க முன்பதிவு செய்த பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களையும் கோ பர்ஸ்ட் நிறுவனம் சமர்ப்பிக்க வேண்டும். இதுதவிர மே 5ம் தேதி முதல் அனுமதிக்கப்பட்ட அட்டவணையின்படி விமானங்களை இயக்குவதற்கான செயல் திட்டத்தையும் தாக்கல் செய்யவேண்டும்’ என டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது.

இந்திய விமானப்போக்குவரத்து சந்தையில் 56 சதவிகித பங்குகளுடன் இண்டிகோ முதல் இடத்தில் உள்ளது. இண்டிகோவுக்கு அடுத்தபடியாக 8.9 சதவிகித பங்குகளுடன் ஏர் இந்தியா 2வது இடத்திலும், 8.7 சதவிகித பங்குகளுடன் விஸ்தாரா 3வது இடத்திலும் உள்ளன.அதேவேளை, இந்திய விமானப்போக்குவரத்து சந்தையில் 6.9 சதவிகித பங்குகளுடன் கோ பஸ்ட் (Go First) விமான நிறுவனம் 5வது இடத்தில் உள்ளது.இந்நிலையில், தாங்கள் திவாலாகிவிட்டதாக கோ பஸ்ட் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், திவால் அறிவிப்பை கோ பஸ்ட் நிறுவனம் தேசிய நிறுவன சட்ட தீர்பாயத்திடம் அறிக்கையாக தெரிவித்துள்ளது.