நீச்சல் பயிற்சியில் ஈடுபட்ட 7 வயது சிறுவன் நீரில் மூழ்கி பரிதாபமாக பலி : கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு – மாநகராட்சி அறிவிப்பு..!

Scroll Down To Discover
Spread the love

சென்னை பெரியமேடு பகுதியில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 7 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தை தொடர்ந்து மாநகராட்சி புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

சென்னையில் உள்ள ‘மை லேடி பார்க்’ நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சிக்காக சேர்க்கப்பட்ட 7 வயது சிறுவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மாநகராட்சிகளில் செயல்படும் நீச்சல் குளங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில்:- 10 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் நீச்சல் குளத்தில் இறங்க அனுமதியில்லை எனவும் 11 முதல் 14 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் நீச்சல் தெரிந்த பெற்றோர்கள் அல்லது பெரியவர்கள் துணை இல்லாமல் அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

3.5 அடி ஆழத்திற்கு மேல் உள்ள நீச்சல் குளங்களில், 4 அடி உயரத்துக்கு குறைவாக உள்ள சிறுவர்களுக்கு அனுமதி இல்லை எனவும் நீச்சல் குளங்களில் டைவ் அடிப்பது போன்ற சாகசங்கள் செய்ய அனுமதி இல்லை எனவும் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

மேலும் குறிப்பிட்ட விதிமுறைகளை கடைப்பிடிக்கவில்லை என்றால், விதிமுறைகளை முறையாக கண்காணிக்காத ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

பெரியமேடு பகுதியில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 7 வயது சிறுவன் உயிரிழந்ததையடுத்து பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றாத ஒப்பந்ததாரர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும் எனவும் மேலும் நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.