மனநலம் பாதிக்கப்பட்ட ஆதிவாசி இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கு – 13 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை..!

Scroll Down To Discover
Spread the love

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள அட்டப்பாடி சின்டேக்கி ஆதிவாசி காலனியை சேர்ந்தவர் மல்லன். அவரது மனைவி மல்லி. இவர்களது மகன் மது (30). அவருக்கு மனநல பாதிப்பு இருந்ததால் வீட்டில் தங்குவதில்லை. வீட்டுக்கு அருகே உள்ள காட்டில் ஒரு குகையில் தான் வசித்து வந்தார்.

இந்தநிலையில் அட்டப்பாடி பகுதியில் உள்ள கடைகளில் உணவுப் பொருட்கள் திருடப்பட்டு வந்தன. மது தான் திருடுவதாக கூறி கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி சிலர் குகையில் இருந்து மதுவை ஊருக்கு கொண்டு வந்து கட்டிப்போட்டு தாக்கினர்.இதில் பலத்த காயமடைந்த மது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் கேரளாவில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக அட்டப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து 16 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை மண்ணார்க்காடு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அட்டப்பாடி பகுதியைச் சேர்ந்த உசேன், மரைக்கார், சம்சுதீன், அனீஸ், அபூபக்கர், சித்திக், உபைது, நஜீப், ஜைஜு மோன், ராதாகிருஷ்ணன், சஜீவ், சதீஷ், ஹரிஷ் முனீர் ஆகிய 14 பேர் குற்றவாளிகள் என்று உத்தரவிட்டுள்ளது. மற்ற 2 பேர் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் முதல் குற்றவாளியான ஹுசைனுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் எஞ்சிய 12 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 16வது குற்றவாளியான முன்னருக்கு IPC பிரிவு 352ன் கீழ் 3 மாத சிறைத்தண்டனையும் 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. தடுப்புப் காவலின் போதே முன்னர் 3 மாதம் சிறையில் இருந்ததை அடுத்து அவர் விரைவில் விடுவிக்கப்பட உள்ளார். மேலும் இந்த வழக்கின் முதல் குற்றவாளியான உசேனுக்கு ரூ.1,05,000 அபராதமும் எஞ்சிய 12 பேருக்கு ரூ.1,18,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.