பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்த தடை – ஆந்திரா மாநில அரசு உத்தரவு..!

Scroll Down To Discover
Spread the love

ஆந்திராவில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்த தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தெலுங்கு தேசம் கட்சி நடத்திய இரு கூட்டங்களில் நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்ததால் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

திருப்பதி ஆந்திராவில் சாலைகளில் பேரணி, பொதுக்கூட்டம் நடத்த மாநில அரசு தடை விதித்துள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் அடுத்த கந்துகூரில் கடந்த மாதம் 28-ம் தேதி தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு நெல்லூரிலிருந்து பொதுக்கூட்டம் நடந்த கந்துகூர் வரை உள்ள 11 கிலோமீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலையில் ரோடு ஷோ நடத்தினார். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து நடந்த பொதுக்கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 8 பேர் பரிதாபமாக இறந்தனர். விபத்து குறித்து போலீசார் மற்றும் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி குறுகிய பகுதியில் பல்லாயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் குவிந்ததால் நெரிசலில் சிக்கி 8 பேர் பலியானது தெரியவந்தது.

இதையடுத்து ஆந்திர மாநில முதன்மைச் செயலாளர் ஹரிஷ் குமார் குப்தா நேற்று இரவு தேசிய நெடுஞ்சாலைகளில் பேரணி மற்றும் சாலையை ஒட்டி உள்ள பகுதிகளில் பொதுக்கூட்டம் நடத்த தடை விதித்தார். தேசிய நெடுஞ்சாலைகளில் பேரணி நடத்துவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. போக்குவரத்து இடையூறு, பொதுமக்கள் அவசர கால சேவைகள், அத்தியாவசிய பொருட்கள் இயக்கம் உள்ளிட்டவைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்காக அந்தந்த மாவட்ட நிர்வாகம், காவல்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும்.

பொது சாலைகளில் கூட்டங்கள் அனுமதிப்பதை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும். அரிதான மற்றும் விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டும் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கான அனுமதியை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்து பரிசீலிக்க வேண்டும். பொதுக்கூட்டங்கள் மற்றும் சாலை ஓரங்களில் கூட்டம் நடத்துவதால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது எனவே அரசியல் கட்சியினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். அரசின் இந்த முடிவு அதிர்ச்சி அளிப்பதாக எதிர்க் கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன.