திருச்செந்தூரில் தருமபுரம் ஆதீன மடத்துக்கு சொந்தமான நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு..!

Scroll Down To Discover
Spread the love

திருச்செந்தூரில் ஆக்கிரமிப்பில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்துக்கு சொந்தமான 3.5 ஏக்கர் நிலத்தை 12 வாரத்தில் மீட்க வேண்டும் என அறநிலையத் துறை ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மார்கண்டன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், திருச்செந்தூரில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான 3.5 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிலத்தை மீட்டு ஆதீனத்திடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு ஏற்கனவே நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் விசாரணை முடிவில் நீதிபதிகள் இன்று பிறப்பித்த உத்தரவு வருமாறு:- தருமபுரம் ஆதீன நிலங்களில் வீடுகள், வணிக நிறுவனங்கள், விடுதிகள் போன்றவை கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கோவில்கள், மடங்களுக்கு சொந்தமான நிலங்களையும், சொத்துகளையும் பாதுகாக்க வேண்டும் என்று பல்வேறு தீர்ப்புகளில் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சொத்துகளின் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு கோவில் பூஜைகள், அன்னதானம் போன்றவை நடத்தப்படும் என்ற நம்பிக்கையில் நிலங்களை தானமான வழங்குகின்றனர்.

அதை பாதுகாப்பது அறநிலையத்துறையின் கடமை என ஏற்கனவே ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் ஆதீனத்துக்கு சொந்தமான நிலங்களை சட்டப்படி மீட்க 12 வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.