தமிழக அரசு தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறது – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு.!

Scroll Down To Discover
Spread the love

தமிழக அரசு தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறது என்றும், குற்றச்சாட்டுகளை சமாளிப்பதற்காக அவர்கள் எத்தனை காரணங்கள் சொன்னாலும், அதை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

டெல்லி மாநகராட்சி தேர்தல் டிசம்பர் 4ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் ஜல்விஹார், கால்காஜி உள்ளிட்ட பகுதிகளில் பாஜக கட்சியை ஆதரித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ”கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து டெல்லி மாநகராட்சியை அடுத்த கட்டத்திற்கு பாஜக எடுத்து சென்றுள்ளதில் எந்த சந்தேகமும் இல்லை. டெல்லி மாநகராட்சி வளர்ச்சி பணிக்காக வரவேண்டிய ரூ.32,000 கோடியை மாநில அரசு தடுத்து நிறுத்தியது.

முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மாயாஜாலத்தை கடந்த ஏழு வருடங்களாக டெல்லி மக்கள் பார்த்துள்ளனர். எங்கு பார்த்தாலும் குப்பை கிடங்காக உள்ள டெல்லியை சுத்தம் செய்து அப்புறப்படுத்த முயற்சித்த டெல்லி மாநகராட்சிக்கு மாநில அரசு எந்த ஒத்துழைப்பும் தரவில்லை. தேர்தல் பிரச்சாரத்தில் காட்டும் ஆர்வத்தை டெல்லி வளர்ச்சி பணிகளில் கெஜ்ரிவால் காட்டவில்லை. டெல்லியில் உள்ள மகளிர்க்கு மட்டுமான சிறப்பு மருத்துவமனைக்கு செய்த செலவை விட கெஜ்ரிவால் சொந்த கட்சிக்காக விளம்பரம் செய்த செலவு தான் அதிகம்.

திமுகவை சேர்ந்தவர்களுக்கு, குறிப்பாக செய்தி தொடர்பாளர்களுக்கு எந்த ஒரு விஷயத்தையும் புரியாமல் பேசுவது வாடிக்கையாக உள்ளது. பிரதமரின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் உள்பாதுகாப்பு பொறுப்பு மட்டுமே எஸ்.பி.ஜி பிரிவின் கையில் உள்ளது. வெளிபாதுகாப்பு அனைத்தும் மாநில அரசின் கையில் தான் உள்ளது. இதுகுறித்து தமிழக ஆளுநரிடம் வழங்கப்பட்ட மனுவில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. பிரதமர் வருகையின்போது பாதுகாப்பு உபகரணங்கள் குறித்து திருப்தி இல்லை என மாநில அரசே அவர்களின் எஸ்பி-யிடம் கூறியுள்ளது.

தமிழக அரசு தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறது. சமாளிப்பதற்காக அவர்கள் எத்தனை காரணங்களை சொன்னாலும் தமிழக மக்கள், திராவிட முன்னேற்றக் கழகம் கொடுக்கும் எந்த காரணத்தையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு விவகாரத்தில் முதலில் மாநில அரசு , எதுவுமே நடக்கவில்லை என கூறினார்கள். ஆனால் , தற்போது தேசிய பாதுகாப்பு முகமையின் டிஜிபி, தமிழகத்தில் ஆய்வு செய்யும் அளவிற்கு நிலைமை மோசமாக உள்ளது” என்று தெரிவித்தார்.