திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா நாளை துவக்கம் – 30ம் தேதி சூரசம்ஹாரம்

Scroll Down To Discover
Spread the love

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை துவங்கும் நிலையில் பக்தர்கள் விரதம் இருக்க ஏதுவாக சுமார் 1 லட்சம் சதுர அடி. பரப்பில் 18 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா நாளை (25ம் தேதி) துவங்குகிறது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது.

அதிகாலை 5.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளியதும் யாகசாலை பூஜை துவங்குகிறது. இதையொட்டி யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானை அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். பகலில் உச்சிகால தீபாராதனைக்கு பிறகு வேள்விசாலை தீபாராதனை நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை, இரவு வேள்வி சாலை பூஜை நடக்கிறது.

அத்துடன் தினமும் மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை மற்றும் பிற கால பூஜைகள் நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 30ம் தேதி மாலை 4 மணிக்கு நடக்கிறது. மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தெய்வானை அம்பாள் தபசு காட்சி புறப்படுதல் நடைபெறும்.

மாலை 3 மணிக்கு கோயிலில் இருந்து சுவாமி எழுந்தருளி 6.30 மணிக்கு 5ம் சந்தியில் அம்பாளுக்கு சுவாமி காட்சியருளி தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு சுவாமி தெய்வானை அம்பாள் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழாவில் திருச்செந்தூர் கோயில் உள் பிரகாரத்தில் பக்தர்கள் தங்கி விரதமிருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக சுமார் 1 லட்சம் சதுர அடி பரப்பளவில் 18 இடங்களில் கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. இதில் அமர்ந்து பக்தர்கள் விரதம் இருக்கலாம்.