18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று முதல் இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி..!

Scroll Down To Discover
Spread the love

நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திரக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இன்று முதல் 75 நாட்களுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் மாதம் இருமுறை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மங்காமல் இருப்பதற்காக பூஸ்டர் அல்லது முன்னெச்சரிக்கை டோஸ் எனப்படும் மூன்றாவது தவணை தடுப்பூசி போடப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு மட்டும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுவந்தது. 18 முதல் 59 வயது வரையானவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் 386 ரூபாய் 25 காசுகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

தமிழகத்தில் 3 கோடியே 60 லட்சம் பேர், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டு 6 மாதங்களைக் கடந்தவர்களாக உள்ளனர். இவர்களில் 18 லட்சத்து 8 ஆயிரம் பேர் மட்டுமே பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்டுள்ளனர். இந்நிலையில், மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி போடச் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.