நகைக்காக 4 வயது சிறுவனை கொலை செய்து பீரோவில் அடைத்த பெண்..!

Scroll Down To Discover
Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஜான் ரிச்சார்ட், வெளி நாட்டில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் நிலையில், இவரது மனைவி சகாய சில்ஜா மகன் ஜோகன் ரிஷி மற்றும் மகள் ஆகியோர் கடியப்பட்டணம் பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் சிறுவன் ஜோகன் ரிஷி நேற்று மதியம் வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்தான் அப்போது திடீரென மாயமானதை அடுத்து உடனடியாக அக்கம் பக்கத்தில் தேடியும் சிறுவன் கிடைக்காததால் சகாய சில்ஜா மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், சிறுவன் மாயமானபோது அவன் தங்க நகைகளை அணிந்திருந்ததால் நகைக்காக கடத்தியிருக்கலாம் என சந்தேகமடைந்த போலீசார், பக்கத்து வீட்டில் வசிக்கும் பாத்திமா என்ற பெண்ணை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

இதற்கிடையில் சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் பாத்திமா வீட்டை அடித்து நொறுக்கி சூரையாடினர் அப்போது அங்கிருந்த பீரோவும் உடைந்தது. அதில். அந்த சிறுவனின் வாய் துணியால் கட்டப்பட்டிருந்தது. இதைக்கண்ட பொதுமக்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து பாத்திமாவை உடனடியாக கைது செய்யக் கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.