பான் – ஆதார் இணைக்காவிடில் ரூ.10,000 அபராதம்…?

Scroll Down To Discover
Spread the love

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி அறிவிக்கை வெளியிட்டது. அதன்பிறகு ஆதார்-பான் இணைப்புக்கான அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஆதார் கார்டுடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு வரும் மார்ச் 31-ந் தேதி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த கெடு தேதிக்குள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க தவறினால் அபராதம் கட்ட வேண்டிய நிலை வரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பயனற்ற பான் கார்டு எண்ணை சமர்பித்தற்காக ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படலாம் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

முன்னதாக, ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்காவிட்டால் அந்த பான் கார்டு எண் பயனற்றதாக அறிவிக்கப்படும் என்று வருமான வரித்துறை தெரிவித்து இருந்தது. தற்போது வெளியிட்டுள்ள புதிய அறிவிக்கையில், பயனற்ற பான் கார்டு வைத்திருப்பவர்கள் வருமான வரித்துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று எச்சரித்துள்ளது.

எனினும், உங்களின் பான் கார்டை அடையாள ஆவணமாக அதாவது, வங்கி கணக்கு துவங்க, ஓட்டுநர் உரிமம் விண்ணப்பிக்க போன்றவற்றிற்கு பயன்படுத்தினால் அபராதம் எதுவும் விதிக்கப்படாது எனத் தகவல்கள் கூறுகின்றன.

எனினும், பயனற்ற பான் கார்டை அடையாள ஆவணமாக கொண்டு நீங்கள் வங்கி கணக்கு தொடங்கும் பட்சத்தில் 50 ஆயிரத்திற்கும் மேல் டெபாசிட் செய்தால் பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். ஏனெனில் 50 ஆயிரத்திற்கு மேலான பரிவர்த்தனைகளை வருமான வரித்துறையின் கண்காணிப்பில் வரும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, நீங்கள் 50 ஆயிரத்திற்கு மேல் டெபாசிட் செய்தாலோ, பணம் எடுத்தாலோ பான் கார்டு எண்ணை சமர்பிக்க வேண்டும்.