கொரோனாவிற்கு எதிராக கோவேக்சின் தடுப்பூசி 77.8 சதவீத செயல்திறன் கொண்டது – லான்செட் ஆய்வறிக்கையில் தகவல்

Scroll Down To Discover
Spread the love

இந்திய அரசின் மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் இணைந்து தயாரித்த ‘கோவேக்சின்’ தடுப்பூசி, கொரோனா வைரஸ் நோய்க்கு எதிராக 77.8 சதவீத செயல்திறன் கொண்டிருப்பதாக ‘தி லான்செட்’ என்ற மருத்துவ இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் கொரோனா வைரஸின் மிகவும் ஆபத்தான டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக ‘கோவேக்சின்’ தடுப்பூசி 65.2 சதவீதம் பயனுள்ளதாக இருப்பதாகவுன் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் இதை மேலும் உறுதிப்படுத்த கூடுதல் ஆய்வுகள் அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.

தடுப்பூசிகளில் பொதுவாக பயன்படுத்தப்படும் ‘செயலிழந்த-வைரஸ் தொழில்நுட்பம்’ தான் கோவேக்சின் தடுப்பூசியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியின் 2 டோஸ்களை செலுத்திக் கொண்டவர்களுக்கு, 2 வாரங்களுக்குப் பின்னர் அவர்களது உடலில் ஒரு வலுவான எதிர்ப்பு சக்தி உருவாகிறது என லான்செட் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நவம்பர் 2020-ல் இருந்து மே 2021-க்கு இடையில் 18-97 வயதுடைய 24,419 தன்னார்வலர்களைக் கொண்டு நடத்தப்பட்ட சோதனையின் போது கடுமையான-தடுப்பூசி தொடர்பான இறப்புகள் அல்லது பாதகமான நிகழ்வுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று லான்செட் மருத்துவ இதழ் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த அறிக்கையில், “கோவேக்சின் 2-வது டோஸ் தடுப்பூசி போடப்பட்ட 14 நாட்களுக்குப் பிறகு கொரோனாவின் தீவிரத்தன்மைக்கு எதிரான செயல்திறன் 77.8 சதவீதமாக இருந்தது. டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக 65.2 சதவீத செயல்திறன் கொண்டுள்ளது. ஆனால் இதை உறுதிப்படுத்த கூடுதல் ஆய்வுகள் அவசியம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கோவேக்சின் தடுப்பூசி கடந்த ஜனவரி மாதம் முதல் அவசர கால பயன்பாட்டுக்கு வந்தது. இருப்பினும் தடுப்பூசியின் செயல்திறன் குறித்த முழுமையான் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என சர்ச்சைகள் எழுந்த நிலையில், இந்த லான்செட் அறிக்கை மூலம் கோவேக்சின் செயல்திறன் குறித்த சர்ச்சை முடிவுக்கு வரும் என எதிர்பார்ப்படுகிறது. கோவேக்சின் தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டிற்கு உலக சுகாதார அமைப்பு கடந்த வாரம் அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.