டெல்லியில் 11-ந் தேதி ஜனாதிபதி தலைமையில் கவர்னர்கள் மாநாடு..!

Scroll Down To Discover
Spread the love

டெல்லியில் 11-ந் தேதி ஜனாதிபதி தலைமையில் கவர்னர்கள் மாநாடு நடக்கிறது.இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.

மாநில கவர்னர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை கவர்னர்களுக்கான மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டு 50-வது மாநாடு நடந்தது. பின்னர் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு இந்த மாநாடு நடத்தப்படவில்லை. தற்போது தொற்று குறைந்து வருவதால் இந்த மாநாடு இந்த ஆண்டு நடத்தப்படுகிறது.

அந்தவகையில் கவர்னர்கள், துணைநிலை கவர்னர்களுக்கான 51-வது மாநாடு டெல்லி ஜனாதிபதி மாளிகையில் 11-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.

இந்த மாநாட்டுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை தாங்குகிறார். அவரது தலைமையில் நடைபெறும் 4-வது மாநாடு இதுவாகும். இதில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரும் பங்கேற்கிறார்கள். குறிப்பாக, இந்த மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்புரை ஆற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா பரவல் மற்றும் பல்வேறு பரபரப்பான அரசியல் சூழலில் நடைபெறும் இந்த மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.