தரையிலிருந்து வானுக்கு பாயும் நடுத்தர ரக ஏவுகணை, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சால்மர் விமானப்படை தளத்தில் இந்திய விமானப் படையிடம்  ஒப்படைக்கப்பட்டது.
 
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையின் செயலாளரும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ-வின் தலைவருமான டாக்டர் ஜி. சதீஷ் ரெட்டி, விமானப்படை தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் ஆர் கே எஸ் பதூரியாவிடம் ஏவுகணையை ஒப்படைத்தார். இந்த நிகழ்வின்போது டிஆர்டிஓ மற்றும் இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் ஏவுகணையின் திறன் குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.
 
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங்:- டிஆர்டிஓ, ஐஏஐ, பல்வேறு கண்காணிப்பு முகமைகள் மற்றும் அரசு மற்றும் தனியார்துறையின் இந்த கூட்டு முயற்சியை பாராட்டியதோடு உலகத்தரம் வாய்ந்த மிகச்சிறந்த ஏவுகணை என்று இதனை குறிப்பிட்டார். “பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையான தற்சார்பு இந்தியாவை அடைவதை நோக்கிய மிகப்பெரும் முயற்சியாக தரையிலிருந்து வானுக்கு பாயும் நடுத்தர ரக ஏவுகணை இந்திய விமானப் படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விமான பாதுகாப்பு முறையில் இது ஒரு மிகப்பெரும் மாற்றத்தை உருவாக்கும்”, என்று அவர் கூறினார்.
 
இந்தியா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான நெருங்கிய கூட்டணியின் உதாரணமாக இந்த ஏவுகணையின் தயாரிப்பைக் குறிப்பிட்ட அமைச்சர், இந்திய விமானப் படையிடம் இந்த ஏவுகணையை ஒப்படைத்திருப்பதன் வாயிலாக பல தசாப்தங்கள் பழமை வாய்ந்த நட்பு புதிய உச்சத்தை அடைந்திருப்பதாக தெரிவித்தார்.
 
இதில் பேசிய ஏர் சீஃப் மார்ஷல் ஆர்.கே.எஸ்.பதூரியா:- ஏவுகணையின் குழுவினரை பாராட்டியதோடு, இதன் மூலம் விமான பாதுகாப்பு செயல்திறன் பெரும் வளர்ச்சி அடையும் என்று குறிப்பிட்டார். இந்த ஏவுகணை தயாரிப்பில் ஈடுபட்ட குழுவினருக்கு டாக்டர் ஜி.சதீஷ் ரெட்டி பாராட்டு தெரிவித்தார்.
 
இதில் இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், ஐஏஐ தலைவர் போஸ் லெவி மற்றும் இதர ராணுவ அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.
                                இந்தியா
                                 September 9, 2021
                                
                                
                            
                            
														
														
														
Leave your comments here...