ஆபாச பட வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா மும்பை போலீசாரால் கைது.!

Scroll Down To Discover
Spread the love

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாசப் படங்களைத் தயாரித்து, விநியோகித்த வழக்கில் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆபாசப் படங்களைத் தயாரித்த ராஜ் குந்த்ரா, அவற்றை மொபைல் செயலி மூலம் விநியோகம் செய்ததாகவும் போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து மும்பை நகர காவல்துறை ஆணையரான ஹேமந்த் நகார்லே வெளியிட்ட அறிக்கையில், “மும்பை குற்றப் பிரிவிற்கு கடந்த பிப்ரவரி மாதம் சிலர் ஆபாசப் படங்களை உருவாக்கி அதனை மொபைல் அப்ளிகேஷனில் பார்க்கும்படி வெளியிடுகிறார்கள் என்று புகார் வந்தது.

இது பற்றி நாங்கள் தீவிரமாக விசாரித்தபோது இந்த ஆபாசப் பட உருவாக்கத்திலும், அதனை மொபைல் அப்ளிகேஷனில் வெளியிடுவதிலும் முக்கிய நபராக ராஜ் குந்த்ரா இருப்பது தெரிய வந்தது. இது குறித்த ஆதாரங்கள் அனைத்தையும் நாங்கள் திரட்டிவிட்டோம். இதன் பின்புதான் அவரை நாங்கள் கைது செய்திருக்கிறோம்..” என்று கூறியுள்ளார்.

ராஜ் குந்த்ரா மீது ஏமாற்றுதல், மோசமாக நடந்து கொள்வது, ஆபாச வீடியோக்களைத் தயாரித்தல், அதனை பொது இடங்களில் வெளியிட்டது.. ஆபாச புகைப்படங்களை வெளியிட்டது.. புத்தகங்களில் புதுப்பித்தது என்று ஐ.டி. சட்டப் பிரிவின் பல்வேறு பிரிவுகளின் கீழ் மும்பை காவல் துறை வழக்கினை பதிவு செய்துள்ளது. கைது செய்யப்பட்ட ராஜ் குந்த்ரா உடனடியாக மும்பையின் குற்றப் பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிகிறது.

காவல்துறையில் இருந்து கிடைத்தத் தகவலின்படி, மும்பையின் குற்றப் பிரிவு போலீஸார் கடந்த வாரம் தங்களிடம் வந்த புகாரை விசாரித்து, அதன் முடிவில் இரண்டு முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவு செய்திருக்கிறார்கள். அதில் தங்களை வலுக்கட்டாயமாக நிர்வாணக் காட்சிகளில் நடிக்க வைத்தார்கள் என்று 9 பேர் புகார் அளித்திருக்கிறார்கள். படமாக்கப்பட்ட இந்தக் காட்சிகள் அனைத்தும் மொபைல் போனில் பணம் கட்டிப் பார்க்கக் கூடிய அப்ளிகேஷன்களில் மட்டுமே தெரியக் கூடியவையாம்.

இந்த விஷயத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும் இதில் ராஜ் குந்த்ராவுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் உள்ளது எனவும் தொடர்ந்து விசாரணை நடப்பதாகவும் மும்பை போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.