மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமை ஆகாமல் மத்திய, மாநில அரசுகள் தான் தடுக்க முடியும் – சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

Scroll Down To Discover
Spread the love

மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமை ஆகாமல் ஒன்றிய, மாநில அரசுகளால் தான் தடுக்க முடியும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. ஒன்பது முதல் பிளஸ் 1 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்ட நிலையில் பின்னர் நிறுத்தப்பட்டது. தற்போது பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மற்ற வகுப்பு மாணவர்கள் கடந்த ஓராண்டிற்கு மேலாக வீடுகளிலேயே முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஏராளமான பள்ளிகள், மொபைல்போன் வழியே பல மணி நேரம் ஆன்லைன் வகுப்புகள் எடுத்து வருகின்றன. பல்வேறு பயிற்சி வகுப்புகளும் ஆன்லைன் மூலம் எடுக்கப்படுகிறது.

இவைகளுக்கு மொபைல் போன்களே பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு நாள் முழுவதும் பல மணிநேரம் மொபைல் போன்களை கூர்மையாக பார்த்து சிறுவர்கள், பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இணைய விளையாட்டுகள் சிறுவர்கள், இளைஞர்களை ஈர்த்து நிரந்தரமாக அவர்களை அடிமையாக்குகிறது. நேரம் கிடைக்கும் போது விளையாட்டாக விளையாட ஆரம்பித்தவர்கள் தற்போது முழுமையாக நாள் முழுவதும் அதிலேயே மூழ்கியுள்ளனர்

இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகளுக்கு பயன்படுத்தப்படும் செல்போன், மடிக்கணினி, கணினி ஆகியவற்றில் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் விளையாட்டுகளை தடைச் செய்ய கோரி மார்ட்டின் ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குழந்தைகளும் இளம் பருவத்திணரும் மாணவர்களும் ஆன்லைன் விளையாட்டுகளில் வரும் கதாபாத்திரங்களாக மாறி வருவதுடன் வன்முறை எண்ணங்களுக்கும் ஆளாவதாக வாதிட்டார்.

அப்போது ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்களில் பலர் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகிவிடுவதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். படிப்பு மற்றும் விளையாட்டுபோன்ற காரணங்களுக்காக அதிகளவில் மொபைல் மற்றும் கணினி பயன்படுத்தும் மாணவர்கள் அதிகப்படியான கோப மனநிலைக்கும் தற்கொலை முயற்சிக்கும் ஆளாவதாக தெரிவித்த நீதிபதிகள், மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகாமல் அரசுகள் தான் தடுக்க முடியும் எனத் தெரிவித்தனர்.

பெற்றோர் மற்றும் பெரியோரிடம் கூட குழந்தைகள் பேசுவது குறைந்துவருவதாக கவலை தெரிவித்ததுடன் பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் நேரத்தை செலவழிக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.பின்னர் வழக்கு குறித்து ஒன்றிய, மாநில அரசுகள் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை விசாரணையை தள்ளிவைத்தனர்