காய்கறி வேனில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் கடத்திய இருவர் கைது.!

Scroll Down To Discover
Spread the love

மதுரை எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்திற்குட்பட்ட மேலக்கால் பிரதான சாலை வழியாக மதுரை மாநகருக்குள் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் குட்கா பொருட்களை காய்கறி ஏற்றும் சரக்கு வாகனத்தில் கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி எஸ்எஸ் காலனி காவல்நிலைய ஆய்வாளர் தலைமையில் போலீசார் மேலக்கால் பிரதான சாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த வேனை மறித்த போது ஓட்டுனர் தப்பி ஓடிவிட்ட நிலையில் வேனுக்குள் இருந்த இருவரை பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் பாரத் தீபக் மற்றும் கார்த்திக் என்பது தெரியவந்தது.

மேலும் தப்பி ஓடிய வேன் ஓட்டுனர் கார்த்திக் பாண்டி என்பதும் , அதன் பின்பு இருவர் முன்னிலையில் வேனை சோதனை செய்த போது முட்டைகோஸ் காய்களுக்கு கீழ் இருந்த மூன்று சாக்கு மூட்டைகளை சோதனை செய்த போது இரண்டு மூட்டைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளும் , மற்றொரு மூட்டையில் 3.950 கிலோ கஞ்சாவும் இருந்தது.

இதனை தொடர்ந்து இருவரையும் விசாரணை செய்ததில் கஞ்சாவை ஆந்திராவிலும் , புகையிலை பொருட்களை பெங்களுரிலும் வாங்கியது தெரியவந்தது . பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் புகையிலை பொருட்களை கைப்பற்றிய போலீசார் இருவரையும் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய வேன் ஓட்டுனரையும் தேடிவருகின்றனர்.

செய்தி: Ravi Chandran