தொடர் உயிரிழப்புகளுக்கு பின்னரும் தமிழக அரசு மெத்தனமாக உள்ளது – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குற்றச்சாட்டு

Scroll Down To Discover
Spread the love

கொரோனா காரணமாக நிகழ்ந்துவரும் தொடர் உயிரிழப்புகளுக்கு பின்னரும் கூட தமிழக அரசு மெத்தனமாக உள்ளது வருத்தத்திற்குரியது என்று தமிழக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜு இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, முன்னாள் முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு கொரோனா முதல் அலையில் மிகத் தீவிரமாக இயங்கி மக்களை காப்பாற்றியது. வீடு வீடாகச் சென்று காய்ச்சல் கண்டறிந்து அவர்களுக்கு கபசுரக் குடிநீர் சத்து மாத்திரைகள் உள்ளிட்டவற்றை வழங்கி கரோனிவைக் கட்டுக்குள் கொண்டுவந்தது.

அதேபோன்று ஊரடங்கின்போது மக்களுக்கு தேவையான காய்கறி பழவகைகளை வீட்டிற்கே நேரடியாக சென்று வழங்கியது. மதுரையை பொருத்தவரை ஒவ்வொரு வார்டிலும் இதற்காகவே 4 வாகனங்கள் இயங்கின.

ஆனால் தற்போது பொறுப்பேற்றுள்ள திமுக தலைமையிலான தமிழக அரசு இத்தனை உயிர் பலிகளுக்கும் பிறகு மெத்தனமாக செயல்படுகிறது. கடந்த முறை நாங்கள் ஊரடங்கு அறிவித்த போது , மக்கள் இதன் பொருளாதாரச் சுமையை எப்படி தங்குவார்கள் என அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். ஆனால் தற்போது அதற்கு நேர்மாறாக செயல்படுகிறார்.

பொருளாதாரத்தை காப்பாற்ற வேண்டும் கரோனா தொற்றிலிருந்தும் மக்களை மீட்க வேண்டும். மக்களும் மிக எச்சரிக்கையாக கவனத்தோடு செயல்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என அதில் குறிப்பிட்டுள்ளார்.