மதுரை மாவட்டம் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திண்டியூர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார் ஸ்ரீலட்சுமி. இவருடைய கணவர் குரு சந்திரசேகர் 13 வருடங்களாக பாரதிய ஜனதா கட்சியில் வர்த்தகர் அணி மாவட்ட துணை தலைவராக இருந்து வருகிறார்.
இவர், நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் மதுரை கிழக்கு தொகுதியில் பாஜக சார்பில், போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். அதே நேரம், பாஜக துணை தலைவராக உள்ள ஸ்ரீனிவாசன் இந்த தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், பாஜக சார்பில் மதுரை கிழக்கு தொகுதியில் குரு சந்திரசேகர் போட்டியிட வேண்டும் எனக்கூறி தின்டியூர் பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் சில கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்தனர்.
இதனைத் தொடர்ந்து தேவாலய போதகர் ஆரோக்கியசாமி அளித்த பேட்டியில்:- “தேர்தலில் வேட்பாளராக போட்டியிடப் போகிறோம், அதற்காக எங்களை ஜெபிக்குமாறு கேட்டுக் கொண்டார்கள். அதன் அடிப்படையில் அவருக்கு இப்போது பிரார்த்தனை செய்துள்ளோம். திண்டியூர் பஞ்சாயத்தில் அவருடைய மனைவி ஊராட்சித் தலைவராக இருந்து நல்லபல காரியங்களைச் செய்திருக்கிறார்கள். எனவே, மீண்டும் நல்லது செய்ய வேண்டும் என்று வேண்டி உள்ளோம். அவர்களுக்கு சீட் கிடைத்து தேர்தலில் வென்று மக்களுக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கையில் தேவனிடத்தில் பிரார்த்தனை செய்துள்ளோம். கிழக்கு தொகுதியில் குரு சந்திரசேகருக்கு மக்கள் வாக்களிக்க பிரார்த்தனை செய்துள்ளோம். தேவன் அவருக்கு உதவி செய்வார்” என்றார்.
மேலும், “சிறுபான்மை மக்களுக்கு விரோதமாக பாஜக இருப்பதாக சிறுபான்மை மக்கள் கருதினாலும், இவர்கள் இந்த பகுதிக்கு நன்மை செய்வதால் அவர்களை ஆதரிக்கிறோம். கொள்கை அடிப்படையில் பாஜகவுடன் நாங்கள் வேறுபட்டிருந்தாலும், தொகுதியின் அடிப்படையில் இவர்கள் நன்மை செய்கிறார்கள் அதனால் இவர்களுக்கு ஆதரவு அளிக்கிறோம்” எனக் கூறினார்.
செய்தி: Ravi Chandran

														
														
														
Leave your comments here...