இந்திய பெண் அஞ்சலி பரத்வாஜூக்கு ஊழல் தடுப்பு விருது – அமெரிக்காவின் ஜோ பைடன் நிர்வாகம் கவுரவம்

Scroll Down To Discover
Spread the love

அமெரிக்காவில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள அதிபர் ஜோ பைடன் நிர்வாகம், சர்வதேச ஊழல் தடுப்பு சாம்பியன் விருது என்ற பெயரில் ஒரு விருதை புதிதாக ஏற்படுத்தி உள்ளது.

இந்த விருதுக்கு இந்தியாவைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் அஞ்சலி பரத்வாஜ் உள்ளிட்ட 12 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அஞ்சலி பரத்வாஜ், தகவல் அறியும் உரிமை இயக்கத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் டோனி பிளிங்கன் கூறுகிறார். அஞ்சலி பரத்வாஜ், டெல்லியில் சதார்க் நகரிக் சங்காதன் என்ற அமைப்பை நிறுவி உள்ளார்.

மேலும் இவர் மக்களின் தகவல் அறியும் உரிமைக்கான தேசிய பிரசார குழுவின் ஒருங்கிணைப்பாளரும் ஆவார். இந்த குழு ஊழலை அம்பலப்படுத்துவோருக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டம் கொண்டு வர வெற்றிகரமாக வாதிட்ட குழு ஆகும்.

இந்த விருதுக்கு தேர்வு பெற்றிருப்பது குறித்து அஞ்சலி பரத்வாஜ் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “இந்த விருது நாடு முழுவதும் உள்ள மக்கள் மற்றும் குழுக்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த அங்கீகாரம்” என பெருமிதம் தெரிவித்துள்ளார்.