விமானப்படைக்கு, எச்ஏஎல் நிறுவனத்திடமிருந்து 83 தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

Scroll Down To Discover
Spread the love

மத்திய அமைச்சரவை, பிரதமர் மோடி தலைமையில் புது டெல்லியில் நேற்று கூடியது. இதில் 73 தேஜஸ் எம்.கே-1ஏ இலகு ரக போர் விமானங்களையும், 10 தேஜஸ் எம்.கே-1 இலகு ரக பயிற்சி விமானங்களையும், பெங்களூர் எச்ஏஎல் நிறுவனத்திடமிருந்து ரூ.45,696 கோடிக்கு வாங்கவும், இதனுடன் ரூ.1,202 கோடி செலவில் வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

தேஜஸ் எம்.கே-1ஏ இலகு ரக போர் விமானம், உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட 4 பிளஸ் தலைமுறை போர் விமானம். இதில் நவீன ரேடார், ஏவுகணை, எலக்ட்ரானிக் போர் முறை, நடு வானில் எரிபொருள் நிரப்பும் வசதி ஆகியவை உள்ளன. இது விமானப்படையின் தேவையை நிறைவேற்றும் ஆற்றல் மிக்கது.

இது இந்தியாவில் வடிமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட முதல் போர் விமானம். இதில் 50 சதவீத பாகங்கள் உள்நாட்டில் தயாரானவை. இது இத்திட்டம் முடிவதற்குள் 60 சதவீதமாக அதிகரிக்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ், விமானங்களின் பழுது பார்ப்பு பணிகளை மேற்கொள்வதற்கான கட்டமைப்பை இந்திய விமானப்படை உருவாக்குவதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் கட்டமைப்பு மூலம் தேஜஸ் போர் விமானங்களை விமானப்படை திறமையாக கையாள முடியும்.