கடந்த 7 மாதத்தில் மதுரை விமான நிலையத்திற்கு கடத்திவரப்பட்ட 3.31 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

Scroll Down To Discover
Spread the love

விமான நிலைய சுங்கத் துறையின் ஏர் இன்டெலிஜென்ஸ் யூனிட் கடந்த ஏழு மாதங்களில் 3.31 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்துள்ளதாக மதுரை விமான நிலைய சுங்க விமான புலனாய்வு பிரிவு இணை ஆணையர் ஜெய்சன் பிரவீன் குமார் ஐ.ஆர்.எஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுபரவல் காரணமாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஸ்பைஸ் ஜெட் மற்றும் இண்டிகோ உள்ளிட்ட பிற தனியார் விமான நிறுவனங்கள் மதுரையிலிருந்து துபாய், சிங்கப்பூர், கோலாலம்பூர் மற்றும் ராஸ்-அல்-கைமா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்து வருவதற்காக சிறப்பு விமானங்களை இயக்கி வந்தன.

அதனை பயன்படுத்தி நேர்மையற்ற கூறுகளால் தங்கம் கடத்தப்படுவதாக உளவுத்துறை மற்றும் சுங்க விமான புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்ததன் அடிப்படையில் மேற்கண்ட நாடுகளில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த பயணிகளிடம் சோதனைகளை தீவிரப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு 2020ல் ஜூன் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் பயணிகளை தனிப்பட்ட முறையில் சோதனை செய்ததிலும் மற்றும் அவர்கள் கொண்டுவந்த உடைமைகளை ஸ்கேன் செய்ததன் மூலம் 26 வழக்குகளில் ரூ .3.31 கோடி மதிப்புள்ள 6607.290 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட 26 நபர்களில் 12 பெண்கள் பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து 2020 டிசம்பர் வரை, மதுரை விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் தொடர்பாக 8 பேரை சுங்க விமான புலனாய்வு பிரிவு கைது செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.