‘அமேசான், பிளிப்கார்ட்’ நிறுவனங்கள் விதிமுறைகளை மீறியதாக புகார் – நடவடிக்கை எடுக்க ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு கடிதம்.!

Scroll Down To Discover
Spread the love

பன்னாட்டு மின்னணு வர்த்தக நிறுவனங்களுக்கும், உள்நாட்டு வர்த்தகர்களுக்கும் இடையே அண்மைக் காலமாக மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, வர்த்தக அமைப்புகள், மத்திய அரசிடம் மின்னணு வர்த்தக நிறுவனங்கள் குறித்த புகார்களை தொடர்ந்து தெரிவித்து வந்தன.அமேசான், பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள், அன்னிய நேரடி முதலீட்டு கொள்கை, அன்னிய செலாவணி மேலாண்மை சட்டம் ஆகியவற்றை அப்பட்டமாக மீறி இருப்பதாக, அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பான, சி.ஏ.ஐ.டி., பல்வேறு புகார்களை, அரசிடம் கொடுத்து உள்ளது.

இதையடுத்து, தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை, இந்த புகார்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு, ரிசர்வ் வங்கிக்கும், அமலாக்கத் துறைக்கும் கடிதம் எழுதியுள்ளது.

இது குறித்து, அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்துஉள்ளதாவது: நாங்கள் கொடுத்திருந்த நான்கு புகார்களை, ரிசர்வ் வங்கிக்கும், அமலாக்கத் துறைக்கும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை அனுப்பி நடவடிக்கை எடுக்க கூறி உள்ளது.

இவற்றில், பிளிப்கார்ட் – ஆதித்யா பிர்லா குழுமம் ஆகியவற்றுக்கிடையேயான ஒப்பந்தத்தில் நடைபெற்றிருக்கும் விதிமுறை மீறல்,அமேசானின் அன்னிய செலாவணி மேலாண்மை சட்ட விதிகள் மீறல் ஆகிய புகார்களும் அடக்கம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.