பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் – அர்ஜூன் சம்பத் கோரிக்கை

Scroll Down To Discover
Spread the love

பகவத் கீதையை தேசிய நூலாக உடனே அறிவிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி கோரிக்கை ஆர்ப்பட்டம் நடத்தவுள்ளதாக அதன் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- வேதம், புராண, இதிகாசங்களின் சாரமான பகவத்கீதை மனித குலத்திற்கு வழிகாட்டும் அற்புத நூலாகும். குருசேத்திர போர்க்களத்தில் பகவான் கிருஷ்ணரால் அருளப்பட்ட நூல் பகவத்கீதை.

பகவத்கீதையும், சமஸ்கிருத மொழியும் தமிழக மக்களுக்கு அந்நியமானது என்பது போன்ற தோற்றத்தை கருணாநிதி, இராமதாஸ் போன்ற தமிழக அரசியல் தலைவர்கள் தங்களது கீதை தேசிய நூல் எதிர்ப்பு அறிக்கைகள் மூலம் கருத்து தெரிவித்துள்ளனர்.

உண்மையில் தமிழகத்து மக்கள் பகவத்கீதையை பெரிதும் நேசிப்பதோடு ‘கீதை நமது பாதை’ என்றே பெரும்பாலான தமிழ் மக்கள் கருதி கீதையை போற்றி வருகின்றனர். தமிழகத்தில் ஒவ்வொரு கிறிஸ்துவர் வீட்டிலும் பைபிள் உள்ளது. ஒவ்வொரு முஸ்லீம் வீட்டிலும் குரான் உள்ளது. ஆனால் ஒவ்வொரு இந்துவின் வீட்டிலும் கீதை உள்ளிட்ட இந்துக்களின் புனித நூல்கள் இல்லை.

எனவே கீதையை தேசிய நூலாக அறிவிப்பதோடு தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் பகவத்கீதையை கட்டாயமாக பாடமாக்க வேண்டும். மேலும்சமஸ்கிருதம் என்பது தமிழக மக்களுக்கும் சொந்தமான மொழியாகும் என்பதை அருட்செல்வர் மகாலிங்கம் உள்ளிட்ட அறிஞர்கள் நிரூபித்து உள்ளனர். தமிழகத்தில் தோன்றிய சங்கரர், இராமனுஜர் உள்ளிட்ட பல மகான்கள் சமஸ்கிருத மொழியில் வேதங்களுக்கு உரை எழுதியுள்ளனர். தமிழகத்தில் தோன்றிய வைத்திய மற்றும் வானசாஸ்திர நூல்கள் நாடு முழுக்க பயன் பட வேண்டும் என சமஸ்கிருத மொழியில் படைக்கப்பட்டன.

ஆனால் திராவிட இயக்கங்கள் இந்து சமயத்தை அழிக்க வேண்டும் என்கிற உள் நோக்கத்துடன் கீதைக்கும், சமஸ்கிருதத்திற்கும் தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கருணாநிதி, இராமதாஸ் ஆகியோர் ஒட்டு மொத்த தமிழர்களின் பிரதிநிதிகள் அல்ல. பெரும்பான்மை தமிழர்கள் கீதையையும் சமஸ்கிருதத்தையும் வரவேற்கின்றனர்.

இந்தியாவின் தேசிய சின்னமாக, புத்தமத சின்னமான அசோக சக்கரம் உள்ளது. தேசிய விலங்காக புலி உள்ளது. தேசியச் சின்னமாக அறிவிப்பதில் மதக் கண்ணோட்டம் இல்லை. இதில் தேசியக் கண்ணோட்டமே முக்கியமாகும். பகவத்கீதை தேசிய நூலாக இருப்பதற்கு முழுத்தகுதி வாய்ந்த நூல்.
இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கல்வி நிலையங்களில் பயிலும் இந்து மாணவர்களுக்கு கட்டாயமாக கற்பிக்கப்பட வேண்டும். தமிழக மக்களில் பெரும்பாண்மையோர் இதையே விரும்புகின்றனர்.

எனவே மத்திய அரசு சற்றும் காலதாமதம் செய்யாமல் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் வரும் மார்கழி மாதம் முழுவதும் நடைபெறும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.