ஆஞ்சநேயர் கோவிலுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமிய முதியவர் – குவியும் பாராட்டுகள்..!

Scroll Down To Discover
Spread the love

பெங்களூரு காடுகோடி பெலதூர் காலனியில் வசித்து வருபவர் எச்.எம்.ஜி.பாஷா (வயது 65). இவர் வாடகை லாரி தொழில் அதிபர் ஆவார். இவருக்கு பெங்களூருவில் இருந்து 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒசகோட்டே வலகேரபுராவில் பழைய மெட்ராஸ் ரோட்டில் 3 ஏக்கர் நிலம் உள்ளது.

இதையொட்டி ஒரு வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்ல பாதை இல்லாததால் பக்தர்கள் சிரமப்பட்டு சென்று வந்தனர்.மேலும் அந்த கோவிலை புனரமைக்க பக்தர்களும், கோவில் நிர்வாகத்தினரும் முடிவு செய்தனர்.

இதற்காக பாஷாவிடம், சில பக்தர்கள் நிலம் வழங்கும்படி கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பாஷா, ஆஞ்சநேயர் கோவில் அருகில் உள்ள 1.5 சென்ட் நிலத்தை கோவிலுக்கு தானமாக வழங்க முடிவு செய்தார். அதன்படி அவர் ரூ.1 கோடி மதிப்பிலான 1.5 சென்ட் நிலத்தை வீர ஆஞ்சனேய சாமி கோவில் அறக்கட்டளைக்கு தானமாக எழுதி கொடுத்துள்ளார். மதத்தை கடந்து ஆஞ்சநேயர் கோவிலுக்கு பாஷா நிலம் வழங்கியதை பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.

இதுகுறித்து பாஷா கூறியதாவது:- இந்துக்கள், முஸ்லிம்கள் என்ற பாகுபாட்டை யாரும் காணக் கூடாது. நாம் அனைவரும் மனிதர்கள். சில அரசியல் தலைவர்கள் சொந்த நலனுக்காக மக்களிடையே சாதி, இனம், மொழி அடிப்படையில் பிரித்து வைத்துள்ளனர். தற்போதைய தலைமுறை வகுப்புவாத நடவடிக்கைகளை சிந்தித்து வருகிறது. இது மாற வேண்டும். சிலர் லவ்-ஜிகாத் போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

இதுபேன்ற செயல்களால் நாடு முன்னேறுமா?. நாம் ஒற்றுமையாக இருந்தால் தான் நாடு முன்னேறும். நாம் நமது நாட்டை நேசிக்க வேண்டும்.நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவே எனது நிலத்தை ஆஞ்சநேயர் கோவிலுக்கு தானமாக வழங்கியுள்ளேன். புதுப்பிக்கப்பட்ட கோவிலை காண ஆர்வமாக உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.