அமேரிக்கன் படைப்புழு தாக்குதலால் பாதிப்புக்குள்ளான விவசாய நிலங்களை விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஆய்வு .!

Scroll Down To Discover
Spread the love

விருதுநகர் மாவட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட விவசாயிகள் 56370 ஏக்கர் நிலத்தில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளனர். இப்பகுதியிலுள்ள விவசாய நிலங்கள் பெரும்பாலும் மானாவாரி நிலங்களாக உள்ளது.

இங்கு மழையை நம்பியே விவசாயம் செய்து வரும் நிலையில் இந்த ஆண்டு நல்ல மழை இருந்தும் விவசாய பயிர்களான மக்காச்சோளம் அமேரிக்கன் படைப்புழு தாக்குதலால் வீணாவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்திருந்தனர். மேலும் மத்திய மாநில அரசுகளிடம் நிவாரணம் வழங்க கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் இன்று விருதுநகர் அருகே வீரச்செல்லையாபுரம் கிராமத்தில் படைபுழு தாக்குதலால் சேதமான மக்காச்சோளப் பயிர்களை விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஆய்வு செய்தார். அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அதில், விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகளின் நிலை மிகவும் அவலமாக மாறியுள்ளது. மக்காச்சோளம் விளைவித்த விவசாயிகளின் நிலை மிக மிக கொடுமையாக மாறியுள்ளது

ஏக்கருக்கு 20 ஆயிரம் செலவு செய்து பச்சைபசேலென விளைந்துள்ள மக்காச்சோள பயிர்கள் படை தாக்குதலால் பாதிப்படைந்துள்ளது. மழை பெய்தும் விவசாயிகளின் வாழ்வில் விடிவுகாலம் வரவில்லை ஆனால் அதைக் கவனிக்காமல் எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் விவசாயிகளின் வாழ்வை அதானியிடமும் அம்பானியிடம் அடகு வைக்கும் மோடிக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டுள்ளனர்

ஒவ்வொரு ஏக்கருக்கும் ரூபாய் 20 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் அதற்காக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன் இதற்காக தமிழக அரசுக்கு கடிதம் எழுத உள்ளேன் என கூறினார்தொடர்ந்து பேசியவர் கடந்த ஆண்டு அதிகாரிகள் அனைத்து இடங்களிலும் ஆய்வு செய்யாமல் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் ஆய்வு மேற்கொண்டு பாதி இழப்பீடு மட்டுமே வழங்கியதாக விவசாயிகள் வேதனை தெரிவித்ததாக கூறினார்.

மேலும் கடந்த ஆண்டு போல் இல்லாமல் இந்த முறை ஒவ்வொரு ஏக்கருக்கும் ரூபாய் 20 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமை என்றார்.எடப்பாடி பழனிச்சாமி அடிக்கடி நானும் ஒரு விவசாயி என கூறுவது வெறும் வசனமாக மட்டுமே இருப்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு விருதுநகருக்கு வருகை தந்த முதலமைச்சர் இந்த பாதிப்புகளை பற்றி ஆராயவில்லை என்பது விவசாயிகளிடம் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாவட்ட ஆட்சியராக இருந்தாலும் சரி மாநில முதலமைச்சராக இருந்தாலும் சரி நேரில் வந்து ஆய்வு செய்து பிரச்சனைகளை கேட்டறிய வேண்டும் என்றார்.இந்த வருடம் புயல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த உள்ளது அதை தடுப்பதற்கு மாநில அரசு உரிய முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.