அயோத்தியில் கட்டப்பட உள்ள மசூதிக்கான ‘லோகோ’வை, ‘இந்திய – இஸ்லாமிய கலாசார நிறுவனம்’ வெளியீடு.!

Scroll Down To Discover
Spread the love

உத்தர பிரதேசத்தில், சர்ச்சைக்குரிய இடம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கின் விசாரணை, பல ஆண்டுகளாக நீடித்தது. இதனைதொடர்ந்து, உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு அளித்த தீர்ப்பில், ‘சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டலாம். மசூதி கட்டுவதற்கு, அயோத்தியில் வேறு ஒரு பகுதியில், 5 ஏக்கர் நிலத்தை, வக்போர்டு அமைப்புக்கு, மாநில அரசு ஒதுக்க வேண்டும்’ என, கூறப்பட்டது. இதையடுத்து, ராமர் கோவில் கட்ட, அயோத்தியில் அடிக்கல் நாட்டப்பட்டது. கோவில் கட்டும் பணிகள் துவங்கியுள்ளன.

மசூதி கட்டுவதற்கு, அயோத்தியில் தன்னிபூர் என்ற இடத்தில், 5 ஏக்கர் நிலத்தை, மாநில அரசு ஒதுக்கியுள்ளது. இதற்கான பொறுப்பு, உ.பி., மாநில சன்னி மத்திய வக்போர்டு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை மேற்கொள்வதற்காக, வக்போர்டு அமைப்பு சார்பில், ‘இந்திய – இஸ்லாமிய கலாசார நிறுவனம்’ என்ற பெயரில், அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. அறக்கட்டளை அலுவலகம், லக்னோவில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அயோத்தியில் அமைய உள்ள மசூதிக்கான ‘லோகோ’ நேற்று வெளியிடப்பட்டது. இதுகுறித்து கூறிய கூட்டமைப்பின் செயலர் அதர் ஹூசைன், ‘இந்த சின்னம் ‘ரூப் எல் ஹிஸ்ப்’ எனும் இஸ்லாமிய குறியீடு’ என தெரிவித்தார். அதர் ஹூசைன் உள்ளிட்ட 5 உறுப்பினர்கள், மசூதி கட்ட ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை நேற்று பார்வையிட்டனர்.