பெங்களூரு வன்முறை: இழப்பீட்டு தொகையை, குற்றவாளிகளிடம் இருந்து வசூலிக்க, கர்நாடக அரசு முடிவு.!

Scroll Down To Discover
Spread the love

கர்நாடகா, தலைநகர் பெங்களூருவில், சமூக வலைதளத்தில் இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் வகையில் வெளியானதாக சொல்லப்படும் கருத்திற்கு எதிராக, 11ம் தேதி இரவு, ஒரு கும்பல் பெரும் வன்முறையில் ஈடுபட்டது. இதில், கே.ஜி., ஹல்லி மற்றும் டி.ஜி., ஹல்லி பகுதிகளில், பொது மற்றும் தனியார் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. இந்த வன்முறையில் ஈடுபட்டவர்களில், 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், உ.பி.,யில், முதல்வர், யோகி ஆதித்யநாத் எடுத்த நடவடிக்கை போல், வன்முறையில் ஏற்பட்ட இழப்புகளை மதிப்பீடு செய்து, அதற்கான நஷ்டஈடு தொகையை, குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்களிடம் இருந்து வசூலிக்க, மாநில அரசு தீர்மானித்துள்ளது.

இதுதொடர்பாக, முதல்வர், எடியூரப்பா தலைமையில், உள்துறை அமைச்சர், பசவராஜ் பொம்மை, தலைமை செயலர், விஜய் பாஸ்கர் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், முதல்வரின் இல்லத்தில், நேற்று நடைபெற்றது.

இது குறித்து, முதல்வரின், ‘டுவிட்டர்’ பதிவில் கூறியுள்ளதாவது: பெங்களூருவின் கே.ஜி., ஹல்லி மற்றும் டி.ஜி., ஹல்லி ஆகிய இடங்களில் நடந்த வன்முறை சம்பவங்களில், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்து அதற்கான இழப்பீட்டு தொகையை குற்றவாளிகளிடமிருந்து வசூலிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி, இதற்கென இழப்பீடு பெறும் ஆணையரை நியமிக்க, உயர் நீதிமன்றத்தை அணுக உள்ளோம்.கலவரத்தில் ஈடுபட்டோர் மீது, குண்டர் சட்டம் மற்றும் சட்ட விரோத செயல்பாடு தடுப்பு சட்டத்தின் கீழ், வழக்குப் பதிவு செய்யப்படும். இவ்வாறு, அவர் பதிவிட்டுள்ளார்.