ஆசனவாயிலில் மறைத்து தங்கம் கடத்திய கும்பல்- 60 லட்சம் மதிப்பிலான 1.30கிலோ தங்கம் பறிமுதல்…!!!

Scroll Down To Discover
Spread the love

ஸ்ரீலங்கன் விமானத்தில் கொழும்பிலிருந்து சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய இலங்கையைச் சேர்ந்த முகமது இன்டிசான் (45) மற்றும் இரண்டு பெண்களான நீலுக்கா சஞ்சீவனி (41), தீபிகா சந்தமாலி ஜெயசேகரா (34) ஆகியோரை செவ்வாய்கிழமை அன்று சுங்கத்துறை அதிகாரிகள் இடைமறித்து விசாரணை நடத்தினர். அப்போது தங்களது ஆசனவாயிலில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்ததை அவர்கள் ஒப்புக் கொண்டனர். அவர்களிடமிருந்து மொத்தம் 12 பொட்டலங்களை மீட்டு சோதனை செய்ததில் ரூ.59.80 லட்சம் மதிப்பிலான 1.32 கிலோ கிராம் தங்கம் இருந்ததைக் கண்டுபிடித்து சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


மற்றொரு சம்பவத்தில் கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா விமானத்தில் சென்னை வந்திறங்கிய காசர்கோட்டைச் சேர்ந்த முகமது ரஃபிக் சஜிபா (47) என்பவரை இடைமறித்து சுங்கத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அவரது பையில் இருந்த 197 அட்டைப் பெட்டிகளிலிருந்த ரூ.3.94 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.


எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் துபாய் செல்லவிருந்த சென்னையைச் சேர்ந்த முகமது ஹகீம் மற்றும் பீர் முகைதீன் ஆகிய இருவரை, அண்ணா சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் இடைமறித்து சோதனை செய்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த கைப்பையில் ரூ.14.32 லட்சம் மதிப்பிலான 17,850 யூரோ கரன்சிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்து, பறிமுதல் செய்தனர்.

மேலும் ஏர் இந்தியா விமானத்தில் தில்லி செல்லவிருந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த பவுசல் கரீம் (21) மற்றும் திருச்சியைச் சேர்ந்த சையத் அஜீ்ஸ் (22), ஆகிய இருவரையும் சந்தேகத்தின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களது உடமைகளைச் சோதனையிட்டனர். அப்போது அவர்களது கைப்பையில் இருந்த எட்டு பொட்டலங்களைப் பிரித்துப் பார்த்தபோது அதில் ரூ.99.91 லட்சம் மதிப்பிலான 2.21 கிலோ கிராம் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.தங்கத்தைக் கடத்திச் செல்ல முயன்ற அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.