வெற்று விளம்பரங்களுக்கும் பணத்தை வாரி இறைக்கும் திமுக அரசு.. வேலைக்கேற்ற ஊதியம் வழங்குவதில் என்ன சிக்கல்..? – நயினார் நாகேந்திரன்

Scroll Down To Discover
Spread the love

வீண் செலவுகளுக்கும் வெற்று விளம்பரங்களுக்கும் பணத்தை வாரி இறைக்கும் திமுக அரசுக்கு அரசு ஊழியர்களின் உழைப்புக்கேற்ற ஊதியத்தை வழங்குவதற்கு மட்டும் கசக்கிறதா? என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

சந்து பொந்துகளில் எல்லாம் சமத்துவம் பேசும் திமுக அரசு, சமவேலைக்கு சமஊதியம் கேட்டுப் போராடிய இடைநிலை ஆசிரியர்களின் மீது அடக்குமுறையை ஏவி அவர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது. கடந்த தேர்தலின் போது இடைநிலை ஆசிரியர்களுக்கு சமஊதியம் வழங்கப்படும் என வாக்குறுதி எண் 311-இல் கூறியதை மறந்துவிட்டு ஆசிரியர்கள் முதல் செவிலியர்கள் வரை அனைவரையும் சமவேலைக்கு சமஊதியம் கேட்டுப் போராடும் அவல நிலைக்குத் தள்ளுவது தான் நாடு போற்றும் நல்லாட்சியின் அம்சமா?

வீண் செலவுகளுக்கும் வெற்று விளம்பரங்களுக்கும் பணத்தை வாரி இறைக்கும் திமுக அரசுக்கு அரசு ஊழியர்களின் உழைப்புக்கேற்ற ஊதியத்தை வழங்குவதற்கு மட்டும் கசக்கிறதா? காலியாகக் கிடக்கும் அரசுப் பணியிடங்களைச் சொன்னபடி நிரப்பாமல், பணியில் இருப்பவர்களுக்கு முறையான ஊதியம் வழங்காமல், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியப் பலன்களை விடுவிக்காமல் ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையே பழுதாக்கியது தான் திமுக அரசின் நான்காண்டு கால சாதனை.

இப்படி மக்களின் வரிப்பணத்தையும் அரசு ஊழியர்களின் ஊதியப் பணத்தையும் கொள்ளையடித்தது மட்டுமன்றி, அரசின் கஜானாவை மொத்தமாக காலி செய்த திமுக அரசை வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் துரத்தியடிக்கப் போவது நிச்சயம்!இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.