புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் பொங்கல் தொகுப்பு – முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

Scroll Down To Discover
Spread the love

புதுச்சேரியில் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைக்கு அரசு சார்பில் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த தீபாவளி பண்டிகைக்கும் மளிகை, எண்ணெய், சர்க்கரை அடங்கிய பரிசு தொகுப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் உள்ள அனைத்து ரேஷன்கார்டு தாரர்களுக்கும் இந்த பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். இந்த தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, ஏலக்காய், பாசிப்பருப்பு என ரூ.750 மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்படும். இந்த பரிசு தொகுப்பு வழங்க டெண்டர் கோரப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

இந்த பரிசு தொகுப்பில் 4 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ நாட்டு சர்க்கரை, ஒரு கிலோ பாசிப்பருப்பு, 300 கிராம் நெய், ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் அடங்கிய பை வழங்கப்பட உள்ளது. புதுச்சேரியில் உள்ள அரசு ஊழியர்கள், கவுரவ ரேஷன் கார்டுதாரர்கள் தவிர அனைத்து ரேஷன் கார்டுதார்களுக்கும் இந்த பரிசு தொகுப்பு வழங்கப்படும்.