டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தல் – தலைவர் பதவியை கைப்பற்றியது ஏபிவிபி.!

Scroll Down To Discover
Spread the love

டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபியின் வேட்பாளர் ஆர்யன் மான் 16,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்யன் மான் 28,841 வாக்குகளைப் பெற்றார். அதே நேரத்தில் காங்கிரஸ் மாணவர் அமைப்பான என்எஸ்யுஐ-ன் வேட்பாளர் ஜோஸ்லின் நந்திதா சவுத்ரி 12,645 வாக்குகளைப் பெற்றார். தேர்தல் நடத்தப்பட்ட நான்கு பதவிகளில், ஏபிவிபி அமைப்பு தலைவர், செயலாளர் மற்றும் இணைச் செயலாளர் ஆகிய மூன்று பதவிகளை வென்றது. துணைத் தலைவர் பதவியை என்எஸ்யுஐ கைப்பற்றியது.

ஆர்யன் மான் ஹரியானாவின் பகதூர்கரைச் சேர்ந்தவர், டெல்லி பல்கலைக்கழக நூலக அறிவியல் துறையின் மாணவரான அவர், ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் வணிகவியலில் இளங்கலை (பி.காம்) பட்டம் பெற்றுள்ளார். தேசிய அளவிலான கால்பந்து வீரரான ஆர்யன் மான், ஏபிவிபியின் மாநில நிர்வாக உறுப்பினரும் ஆவார்.

இந்த ஆண்டு மாணவர் சங்க தேர்தலுக்கான ஆர்யன் மானின் பிரச்சாரத்தில், மாணவர்களுக்கு மானிய விலையில் மெட்ரோ பாஸ்கள், பல்கலைக்கழக வளாகம் முழுவதும் இலவச வைஃபை மற்றும் சிறந்த விளையாட்டு வசதிகள் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை முன்வைத்தார். நடிகர்கள் சஞ்சய் தத் மற்றும் ரன்தீப் ஹூடா போன்ற பிரபலங்களும் ஆர்யன் மானுக்காக பிரச்சாரம் செய்தனர்.

நேற்று காலை மற்றும் மாலை என இரு அமர்வுகளில் 52 மையங்களில் 195 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் வாக்குப்பதிவு 39.45 சதவீதமாக இருந்தது.

ஏழு ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் மாணவர் அமைப்பான என்எஸ்யுஐயின் ரோனக் காத்ரி கடந்த ஆண்டு டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவராக வென்றார். ஒரே ஆண்டில் இப்போது தலைவர் பதவி மீண்டும் ஏபிவிபி வசம் சென்றுள்ளது.