22 இந்தியர்களுடன் சென்ற வணிக கப்பல் மீது டிரோன் தாக்குதல் – விரைந்த இந்திய கடற்படை கப்பல்..!

Scroll Down To Discover
Spread the love

இந்தியப் பணியாளர்களுடன் வரும் கப்பல்கள் மீதான தாக்குதல் தொடரும் நிலையில், அதேபோல ஏடன் வளைகுடாவில் வந்த கப்பல் மீது இப்போது திடீரென டிரோன் தாக்குதல் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏடன் வளைகுடாவில் இந்தியர்களுடன் சென்ற வணிக கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. சம்பவ இடத்திற்கு இந்திய கடற்படை கப்பல் விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஏடன் வளைகுடா உள்ளிட்ட பகுதிகளில் வரும் வணிக கப்பல்கள் மீது தாக்குதல்கள் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது.

இதைத் தடுக்க அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் நடவடிக்கை எடுத்தாலும் கூட இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் மார்லின் லாண்டா என்ற வணிக கப்பல் 22 இந்தியர்கள், 1 வங்கதேச நாட்டவர் ஒருவருடன் ஏடன் வளைகுடா பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது கப்பல் மீது திடீரென ஏவுகணை தாக்குதல்கள் நடந்தன. இதில் கப்பல் தீப்பற்றி எரிய துவங்கியது.

இதில் கப்பலில் சிக்கியுள்ளவர்கள் எஸ்.ஓ.எஸ்., மூலம் தெரிவித்த தகவலின் படி ஆந்திராவின் விசாப்பட்டினத்திலிருந்து இந்திய கடற்படை கப்பல், வணிக கப்பலுக்கு உதவி செய்ய சம்ப இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் காரணமாகச் செங்கடலில் வணிகக் கப்பல்கள் மீது ஹவுதி குழு நடத்தும் தாக்குதல்கள் அதிகரிக்கும் நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது.இஸ்ரேல் ஹமாஸ் போர் தொடரும் நிலையில், காசா பகுதியில் நடக்கும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி ஹவுதி படை தாக்குதல்களை ஆரம்பித்தனர். இஸ்ரேல் கொடியுடன் வரும் கப்பல்களை மட்டுமே தாக்குவதாக ஹவுதி படை கூறினாலும் கூட உண்மையில் அனைத்து கப்பல்கள் மீதும் தாக்குதல்கள் நடப்பதாகவே உலக நாடுகள் குற்றஞ்சாட்டுகின்றன.