காவல் நிலையங்களை தகர்க்க மாவோயிஸ்டுகள் திட்டம் – உளவுத்துறை எச்சரிக்கை

Scroll Down To Discover
Spread the love

கேரளாவில் 8 போலீஸ் நிலையங்களை தகர்க்க மாவோயிஸ்டுகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. தொடர்ந்து காவல் நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம், பத்தனம்திட்டா, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளது. அடிக்கடி ஊருக்குள் வந்து பொதுமக்களிடம் உணவு மற்றும் பொருட்களை வாங்கி செல்வது வழக்கம். மேலும் போலீஸ் நிலையங்கள், வனத்துறை அலுவலகங்கள் உள்பட அரசு அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்துவதும் உண்டு. பலமுறை வன பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும், கேரள அதிரடிப்படை போலீசாருக்கும் துப்பாக்கி சண்டை நடந்துள்ளது. இதில் ஏராளமான மாவோயிஸ்டுகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக வயநாடு மாவட்டம் கம்பமலை பகுதியில் ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் அடிக்கடி வந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அதிரடிப்படை போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள 8 காவல் நிலையங்களை தகர்க்க மாவோயிஸ்டுகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை வெளியிட்டுள்ள தகவலால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோழிக்கோடு மாவட்டத்திலுள்ள வளயம், குற்றியாடி, தொட்டில்பாலம், பெருவண்ணாமூழி, கூராச்சுண்டு, தாமரசேரி, திருவம்பாடி மற்றும் கோட்டசேரி ஆகிய காவல் நிலையங்களை மாவோயிஸ்டுகள் தகர்க்க கூடும் என்பதால் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உளவுத்துறை தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து இந்த காவல் நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு மாவட்டத்திலுள்ள வனப்பகுதிக்கு தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில வனப்பகுதி வழியாக எளிதில் மாவோயிஸ்டுகள் வர வாய்ப்புள்ளது. எனவே இங்குள்ள வனப்பகுதியில் சோதனையை தீவிரப்படுத்த கேரள அதிரடிப்படையினர் திட்டமிட்டுள்ளனர்.