ஒரு வீட்டுக்கு ஒரே மின் இணைப்பு எனப் பரவிய தகவல் உண்மையா? – மின்சார வாரியம் விளக்கம்!

Scroll Down To Discover
Spread the love

ஒரு வீட்டுக்கு ஒரு மின்சார இணைப்பு தான் வழங்கப்படும் என்ற தகவல் உண்மையில்லை எனத் தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் தெரிவித்திருக்கிறது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் இதுவரை 99 சதவீதத்துக்கும் மேல் வீடு, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியானது வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களில் சமூக வலைதளங்களில், ஒரே வீட்டில் ஒரே நபரின் பெயரில் உள்ள ஒன்றிற்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகள் ஒன்றிணைக்கப்படுவதற்காகவே ஆதார் எண் பெறப்பட்டு மின் இணைப்புடன் இணைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது என்ற கருத்து பதியப்பட்டு பரவி வருகிறது. இந்த கருத்து முற்றிலும் தவறானது மற்றும் உண்மைக்கு புறம்பானது ஆகும்.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த 9-9-2022 அன்று வெளியிட்ட வீதப்பட்டியலில் மாற்ற ஆணையின் சரத்துக்களின்படி, கள ஆய்வின் அடிப்படையில் ஒரே வீட்டில், குடியிருப்பில், ஒரே நபரின் பெயரில், ஒரு குடும்பத்தினரே உபயோகிக்கும் ஒன்றிற்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகளை ஒன்றிணைக்க அல்லது அத்தகைய கூடுதல் மின் இணைப்புகளை பொதுப் பயன்பாட்டிற்கான மின் இணைப்பாக மாற்ற உத்தரவு பிறப்பித்திருந்த போதிலும், சில நிர்வாக காரணங்களால் மேற்படி ஒன்றிணைப்பு, வீதப்பட்டியல் மாற்றும் பணி தொடங்க கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.

எனவே, இது தொடர்பான எந்த ஒரு செயல் உத்தரவும் மின் பகிர்மான வட்டங்களில் உள்ள பிரிவு அலுவலகங்களுக்கு பிறப்பிக்கப்படவில்லை. எனினும் இக்குறிப்பிட்ட கள ஆய்வின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பிரிவு அலுவலரின் கடித வரைவு செயல், ஒரு தனிப்பட்ட நிகழ்வு ஆகும். இதில் சம்பந்தப்பட்ட அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.