தீபாவளி பூஜை – சாட்டையால் அடிவாங்கி நேர்த்திக் கடனை செலுத்திய சத்தீஸ்கர் முதலமைச்சர்..!

Scroll Down To Discover
Spread the love

சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் சாட்டையால் அடிவாங்கி நேர்த்திக் கடனை செலுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டம் ஜாஞ்சகிரி கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவில் பங்கேற்ற போது முதலமைச்சர் பூபேஷ் பாகல் சாட்டையால் அடிவாங்கி நேர்த்திக் கடனை செலுத்தியதாக கூறப்படுகிறது. வட மாநிலங்களில் தீபாவளிக்கு அடுத்த நாள், கிருஷ்ணருக்காக கோவர்தன பூஜையில் ஈடுபடுவது வழக்கம். கிருஷ்ண புராணத்தின்படி கோகுலவாசிகள் இந்திரனை வணங்காமல் கிருஷ்ணனின் பேச்சைக்கேட்டு கோவர்தன் குன்றை பூஜை செய்தனர்.

இதனால் கோபம் கொண்ட இந்திரன் சூறாவளிக்காற்றுடன் பெருமழையை பெய்வித்தார். கோகுலவாசிகளையும் பசுக்கூட்டத்தையும் கிருஷ்ணன் கோவர்தன மலையை குடையாகப் பிடித்துக் காத்ததாக கூறப்படுகிறது. கிருஷ்ணனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வடமாநிலங்களில் தீபாவளிக்கு அடுத்த நாள் கோவர்தன பூஜை கொண்டாடப்படுகிறது.

அந்நாளில், சாட்டையை கொண்டு அடித்துக் கொண்டால், தீமைகள் விலகி நன்மைகள் பெருகும் என பொதுமக்கள் நம்புகின்றனர். அந்த வகையில், முதலமைச்சர் பூபேஷ் பாகல் தனது நேர்த்திக்கடனை செலுத்தியதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பூஜையில் கலந்துக்கொண்ட முதலமைச்சர், மற்றொருவரை தனது கையில் சாட்டையால் அடிக்கச் செய்தார். இந்த வீடியோ காட்சி சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது.