கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் பிபிஇ கிட் அணிந்து நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

Scroll Down To Discover
Spread the love

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன்காரணமாக மாநில அளவில் சற்று தொற்று பரவல் குறைய தொடங்கி இருக்கிறது. அதேசமயம் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா நோய் தொற்றின் பாதிப்பு நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது.தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்து வருகிறார். அதன் ஒருபகுதியாக ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.

அங்கு, கொரோனோ நோயாளிகள் சிகிச்சை பெற அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 300 படுக்கை வசதியினைப் பார்வையிட்டார். மேலும், கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ரோட்டரி சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார்.தொடர்ந்து, மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதோடு, தலா 5 மருத்துவர்கள், 5 செவிலியர்களுக்கு தற்காலிக பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.


அதையடுத்து திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தன்னார்வலர்கள் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கை வசதியைத் திறந்து வைத்தார்.அதனை தொடர்ந்து தொற்று பாதித்தவர்களை அழைத்துச் செல்லவும், அறிகுறி இருப்பவர்களை ஆய்வகத்துக்கு அழைத்துச் செல்லவும் மாவட்டத்தில் 20 கார் ஆம்புலன்ஸ் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். மேலும் தொகுப்பூதிய அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கான பணி நியமன ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இறுதியாக கோவை மாவட்ட இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்-அமைச்சர் முக.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து தொற்று பாதித்தவர்களை அழைத்துச் செல்லவும், அறிகுறி இருப்பவர்களை ஆய்வகத்துக்கு அழைத்துச் செல்லவும் கோவையில் 50 கார் ஆம்புலன்ஸ் சேவையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து, மருத்துவமனைக்குள் இருக்கும் கொரோனா வார்டுக்கு பிபிஇ கிட் அணிந்து சென்ற முதல்வர் ஸ்டாலின், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், நோயாளிகளிடமும் சிகிச்சை பற்றி கேட்டறிந்தார். கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் இருக்கும் வார்டில் முதலமைச்சர் ஒருவர் நேரில் சென்று கவச உடை அணிந்து ஆய்வு செய்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.