நம்மாழ்வார் நினைவு நாளில் சத்குரு புகழாரம் ; காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் மரக்கன்றுகளை நட்டு நம்மாழ்வாரை நினைவு கூர்ந்த விவசாயிகள்.!

Scroll Down To Discover

இயற்கை விவசாயத்தை மீட்டெடுத்து மக்களுக்கு நஞ்சில்லா உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக அயராது பாடுப்பட்டவர் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். அவரது மறைவு தமிழகத்துக்கு ஒரு பேரிழப்பாகும். இருப்பினும், அவர் விட்டு சென்ற பணியை ஈஷா விவசாய இயக்கம் அவர் காட்டிய வழியில் தொடர்ந்து தீவிரமாக செயலாற்றி வருகிறது.

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவால் தொடங்கப்பட்ட இவ்வியக்கம் 2015-ம் ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் மாதந்தோறும் இயற்கை விவசாய களப் பயிற்சிகளை நடத்தி வருகிறது. இதுவரை 8,700-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நம்மாழ்வாரின் 7-ம் ஆண்டு நினைவு தினமான இன்று (டிசம்பர் 30) காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், தர்மபுரி, செங்கப்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, நாமக்கல், ஈரோடு, கரூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி உட்பட தமிழகத்தின் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் விவசாயிகள் தங்கள் குடும்பத்தினருடன் மரக்கன்றுகள் நட்டு நம்மாழ்வாரின் சேவையை நன்றியுடன் நினைவு கூர்ந்தனர்.

மேலும், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “நம்மாழ்வார் ஐயா – பாரம்பரிய இயற்கை விவசாய முறைகளால் மண்ணை வளப்படுத்த விவசாயிகளை ஊக்குவித்த ஞானம் மிகுந்த ஒரு எளிய மனிதர். நாடோடியான துறவியாகவும் நெறிசாரா கதைகள் சொல்பராகவும் போற்றப்பட்டவர். ஈஷா விவசாய இயக்கத்தின் தொடக்க காலங்களில் அவர் ஆற்றிய பங்களிப்பை நன்றியுடன் நினைவுகூர்கிறோம்” என பதிவிட்டுள்ளார்.


நம்மாழ்வார் அவர்கள் உயிருடன் இருந்த காலத்தில் ஈஷாவின் சுற்றுச்சூழல் பணிகள் அனைத்திலும் அவர் மிகுந்த ஆர்வத்துடன் இணைந்து செயல் புரிந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, மண்ணை வளமாக வைத்து கொள்ள நாட்டு மாடுகளும், மரங்களும் அவசியம் என்பதை அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அதன் அடிப்படையிலும், விவசாய நிலங்களில் மரங்கள் நடும் பணியை ஈஷா பெரியளவில் ஊக்குவித்து வருகிறது.