ராணுவத்துக்கு ரூ.8,722 கோடிக்கு தளவாடங்கள் கொள்முதல் – டி.ஏ.சி கவுன்சில், ஒப்புதல்..!

Scroll Down To Discover
Spread the love

ராணுவத்துக்கு, 8,722 கோடி ரூபாய்க்கு தளவாடங்கள் கொள்முதல் செய்ய, டி.ஏ.சி., எனப்படும், ராணுவ கொள்முதல் கவுன்சில், ஒப்புதல் அளித்து உள்ளது.

டில்லியில், டி.ஏ.சி.,யின் கூட்டம், ராணுவ அமைச்சர், ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்தது.இதில், ராணுவத்துக்கு, 8,722 கோடி ரூபாய்க்கு, தளவாடங்கள் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.இதன் வாயிலாக, தற்சார்பு இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், பல தளவாடங்களை, நாட்டின் பொதுத் துறை நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுஉள்ளது. குறிப்பாக, 106 பயிற்சி விமானங்களை, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடம் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், கடற்படை, கடலோர பாதுகாப்பு படைகளின், போர் கப்பல்களில் பொருத்துவதற்கான, அதிநவீன துப்பாக்கியை, பி.எச்.இ.எல்., நிறுவனத்திடம் வாங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், தற்சார்பு திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், 101 வகையான ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக, இரண்டு நாட்களுக்கு முன் அறிவித்தார். இதையடுத்தே, டி.ஏ.சி., ராணுவ தளவாடங்கள் கொள்முதலுக்கு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.