இந்தியாவில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் முதன்முறையாக 2.5%-க்கும் கீழே குறைந்தது..!

Scroll Down To Discover
Spread the love

இந்தியாவில் கொரோனா தொற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் முதன்முறையாக 2.5%-க்கும் கீழே குறைந்தது உள்ளது என சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

மருத்துவமனையில் சேர்க்கப்படும் நோயாளிகளுக்கு செம்மையான சிகிச்சை அளிப்பதில், மத்திய அரசு மற்றும் மாநில / யூனியன் பிரதேச அரசுகள் மேற்கொண்டு வரும் ஒருமித்த கவனம் கொண்ட அணுகுமுறைகள் காரணமாக, தொற்று நோயால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் 2.5 சதவீதத்தும் கீழ் குறைந்துள்ளது. செம்மையான நோய்த் தடுப்பு உத்தி, தீவிர மருத்துவப் பரிசோதனை, ஒட்டுமொத்த தரமான கவனிப்பு அணுகுமுறையின் அடிப்படையிலான தரநிலைப்படுத்திய சிகிச்சை மேலாண்மை நடைமுறைகள் காரணமாக தொற்று நோயால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது. தொற்று நோயால் ஏற்படும் மரணங்களின் விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இப்போது அது 2.49 சதவீதமாக உள்ளது. உலக அளவில் இந்த மரண விகிதம் மிகவும் குறைவாக உள்ள நாடாக இந்தியா உள்ளது.

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, மாநில / யூனியன் பிரதேச அரசுகள் அரசு மற்றும் தனியார் துறையினர் முயற்சிகளுடன் மருத்துவப் பரிசோதனை வசதிகளைத் துரிதமாக அதிகரித்து, மருத்துவமனைக் கட்டமைப்புகளை மேம்படுத்தியுள்ளன. நோய்த் தாக்குதலுக்கு எளிதில் இலக்காகும் ஆபத்து வாய்ப்புள்ள முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்தும் வகையிலான பிற நோய்கள் இருப்பதைக் கண்டறிய பல மாநிலங்கள் மக்கள் தொகை அளவில் கணக்கெடுப்பு நடத்தியுள்ளன. கைபேசி செயலிகள் போன்ற தொழில்நுட்ப உதவிகளுடன், இந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்ட காரணத்தால், தொற்று நோய்க்கு இலக்காக அதிக வாய்ப்புள்ளவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டனர்.

அதனால் ஆரம்ப கட்டத்திலேயே நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு, உரிய சமயத்தில் சிகிச்சை அளித்து, மரணங்கள் குறைக்கப்பட்டன. இடம் பெயர்ந்து செல்லும் மக்களைக் கையாள்வது, சமுதாய அளவில் விழிப்புணர்வை மேம்படுத்துவதில், ஆஷா திட்ட அலுவலர்கள், ஏ.என்.எம். பணியாளர்கள் போன்ற சுகாதாரத் துறையின் முன்கள வீரர்கள் பாராட்டுக்குரிய பணிகளைச் செய்திருக்கின்றனர்.

இவற்றின் விளைவாக 29 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், தொற்று நோய் மரணங்களின் எண்ணிக்கை, இந்திய அளவிலான சராசரியைக் காட்டிலும் குறைவாக உள்ளன. 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தொற்று நோய் மரணங்கள் எதுவுமே இல்லாமல் பூஜ்யமாக உள்ளது. 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இது 1 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. நாட்டில் பொது சுகாதார அமைப்பு முறை சிறப்பாக செயல்படுவதைக் காட்டுவதாக இது உள்ளது.