கடலூர் மாவட்டம் திட்டக்குடி திமுக சட்டமன்ற உறுப்பினர் கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி

Scroll Down To Discover
Spread the love

திட்டக்குடி சட்டமன்ற தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர், கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழகத்தில் ஏற்கனவே திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உயிரிழந்தார். மேலும் செஞ்சி தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மஸ்தானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார். இதேபோல அதிமுக அமைச்சர்கள்,சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிலரும் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி திமுக சட்டமன்ற உறுப்பினர் கணேசனுக்கு சளி மற்றும் இருமல் பிரச்சினை ஏற்பட்டது. கொரோனாவுக்கான அறிகுறி தென்பட்டதால் அவர், கடந்த 16-ந் தேதி விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு தானாக சென்று கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அவரது உமிழ்நீரை எடுத்துக்கொண்ட சுகாதாரத்துறையினர், அதனை பரிசோதனைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த பரிசோதனை முடிவு நேற்று வந்தது. இதில் கணேசன் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், விருத்தாசலம் தில்லைநகரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று, கொரோனா தொற்று உறுதியானது குறித்து கணேசன் எம்.எல்.ஏ.விடம் கூறினர். இதையடுத்து அவர், சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.களத்தில் நின்று பணியாற்றும் மருத்துவர்கள்,காவலர்கள் உள்ளிட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களையும் கொரோனா தொடர்ந்து பதம் பார்த்து வருகிறது.