பிரதமர் மோடிக்கு அழைப்பு ; அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி அடுத்த மாதம் தொடங்குகிறது.!

Scroll Down To Discover
Spread the love

அயோத்தியில் ஆகஸ்ட் மாதத்தில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் துவங்கப்படும் என ராம ஜன்ம பூமி அறக்கட்டளை தலைவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதி அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியும், கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளையை மத்திய அரசு 3 மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

அதுமட்டுமல்லாமல் அயோத்தியில் 5 ஏக்கர் நிலத்தை மசூதி கட்டுவதற்காக உத்தரப் பிரதேச அரசு சன்னி வக்பு வாரியத்துக்கு ஒதுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை மூலம் ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கொண்டுவரப்பட்ட ஊரடங்கால் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ஏற்பாடு செய்யப்பட்ட பணிகள் நிறுத்தப்பட்டன. அதன்பின் கடந்த ஜூன் மாதத்திலிருந்து ராமர் கோயில் கட்டுமானத்துக்கான பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

இது குறித்து ராம ஜன்ம பூமி தீர்த்தஷேத்திர அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்யா கோபால் கூறியதாவது:அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் ஆகஸ்ட் மாதத்தில் துவங்கும். என்றைய தேதி என்பது குறித்து இன்று (18 ம்தேதி) நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

மேலும் கோவில் கட்டுமான பணி துவக்க விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனது அழைப்பை ஏற்று பிரதமர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என நம்புகிறேன். கோவில் கட்டுமான பணி துவக்க விழாவை ஆன்லைனிலோ அல்லது வீடியோ கான்பரன்சிங் முறையிலோ நடத்த விரும்பிவில்லை. நிகழ்ச்சிக்கு பிரதமர் நேரிடையாக வருவார் என எதிர்பார்க்கிறோம் என அவர் கூறினார்.