நேபாளம் அரசுக்கு எதிராக இந்திய டி.வி. சானல்கள் பிரச்சாரமா..? இந்திய டி.வி. சானல்களுக்கு நேபாளம் தடை

Scroll Down To Discover
Spread the love

இந்திய செய்தி தொலைக்காட்சிகளுக்கு நேபாள அரசு திடீரென தடை விதித்துள்ளது. டிடி செய்தி சேனலை தவிர அனைத்து செய்தி தொலைக்காட்சிகளையும் ஒளிபரப்புவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்ணமைக் காலமாக நேபாளத்திற்கும் இந்தியாவிற்கும் உறவு அவ்வளவு சிறப்பாக இல்லை. இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மூன்று பகுதிகளை நேபாளம் சொந்தம் கொண்டாடி திடீரென வரைபடம் வெளியிட்டது. வரைபடத்திற்கு நேபாள நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.

இந்திய பகுதிகளை இணைத்து புதிய வரைபடம் வெளியிட்டது, இந்திய எல்லையில் சாலை அமைக்கக் கூடாது என இந்தியாவுக்கு தனது எதிர்ப்பை தெரிவித்தது, நேபாளத்தில் கொரோனா தொற்று அதிகரித்தது காரணம் இந்தியா தான் என அந்நாட்டு அரசு குற்றம் சாட்டியது போன்வற்றால் இந்திய நேபாள நாட்டிற்கும் இடையே சமீப காலமாக கருத்து மோதல் இருந்து வருகிறது.

இந்நிலையில் நேபாளம் அரசுக்கு எதிராக இந்திய டி.வி. சானல்கள்தவறான பிரச்சாரம் செய்து வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து நேபாள நாட்டில் இன்று மாலையில் இருந்து இந்திய செய்தி சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு சொந்தமான தூர்தர்ஷனை தவிர மற்ற அனைத்து தனியார் செய்தி சேனல்களுக்கும் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.சீனா உடனான நட்பால் இந்தியாவை நேபாளம் சீண்டி வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பார்லிமென்டில், பட்ஜெட் கூட்டத் தொடரை, பிரதமர் சர்மா ஒலி ஒத்தி வைத்தார்.இந்த முடிவை, கட்சித் தலைமையிடம் ஆலோசிக்காமல் எடுத்த காரணத்தால், ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் மற்றொரு தலைவரும், முன்னாள் பிரதமருமான புஷ்ப கமல் தாஹல் பிரசந்தா உட்பட, நிலைக்குழு உறுப்பினர்களில் பெரும்பாலானோர், சர்மா ஒலிக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள் ளனர்.இது மட்டுமல்லாமல், பிரதமர் சர்மா ஒலி, சீனாவுடன் வைத்துள்ள ரகசிய உறவு காரணமாக, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகவும், அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.எனவே, சர்மா ஒலி, பிரதமர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.இப்பிரச்னைக்கு தீர்வு காண, கட்சியின் செயல் தலைவர் பிரசந்தாவுடன், பிரதமர் ஒலி, பேச்சு நடத்தி வருகிறார்.

கடந்த ஒரு வாரத்தில், ஐந்துக்கும் மேற்பட்ட முறை, இவர்கள் இருவரும் சந்தித்துள்ளனர். எனினும், எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை என தகவல் கிடைத்துள்ளது.நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைக்குழு கூட்டம், நேற்று முன்தினம் நடைபெறுவதாக இருந்தது. பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்பதால், இந்த நிலைக்குழு கூட்டம், இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இன்று நடைபெறும் நிலைக்குழு கூட்டத்தில், பிரதமர் ஒலியின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் என, அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.