திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை குறித்து சித்தூர் மாவட்ட கலெக்டர் நாராயண பரத் குப்தா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு பல்வேறு ஊர்களில் இருந்து வருகின்றனர்.அவ்வாறு வரக்கூடிய பக்தர்கள் மூலமாக கொரோனா பரவல் ஏற்படுகிறதா என்று பலரும் கேட்கின்றனர்.
ஏழுமலையான் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களில் இருந்து தினமும் 100 பேருக்கு சுழற்சி முறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதேபோன்று தேவஸ்தானத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் கடந்த சில தினங்களாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருமலையின் அன்னமய்ய பவனில், நேற்று காலை அவசர அறங்காவலர் குழு கூட்டம், காணொலி காட்சி வாயிலாக நடந்தது. அதில், அறங்காவலர் குழு தலைவர், சுப்பாரெட்டி கூறியதாவது: திருமலையில், ஏழுமலையான் தரிசனம் ஜூன், 8ம் தேதி துவங்கப்பட்டது. திருமலைக்கு வந்து தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், திருமலையில் பணிபுரியும் பாதுகாப்பு ஊழியர்கள், அர்ச்சகர்கள் என, 17 பேருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில், தரமான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. தேவஸ்தானத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும், கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. பணிக்கு வரும் ஊழியர்களுக்கு சோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுவதாகவும், தடைசெய்யப்பட்ட பகுதியில் இருந்து பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு வரவேண்டாம் எனவும் அவர் கூறினார்.

														
														
														
Leave your comments here...