ஆலத்தூரில் ரூ.25 கோடியே 52 லட்சம் புதிய செலவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்.! பொது மக்கள் பாராட்டு.!

Scroll Down To Discover
Spread the love

சென்னை மாநகராட்சி  ஆலந்தூர் மண்டலத்தில் மழைக்காலங்களில் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அதிகளவில் கழிவுநீர் வருவதால், வெளியேற வழி இல்லாமல் ஆதம்பாக்கத்தில் பல பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்துவிடுவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.எனவே கூடுதலாக ஒரு சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பிறகு 2011-ம் ஆண்டு ஆலந்தூர் நகராட்சி, சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. குடியிருப்புகள் அதிகமாகி வருவதால் கூடுதல் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்கவேண்டும் என்று பொதுமக் கள், சுமார் 15 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்தநிலையில் பொதுமக்களின் 15 ஆண்டு கோரிக்கையை ஏற்று சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் தற்போது ஆதம்பாக்கம் நிலமங்கை நகரில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலேயே கூடுதலாக 10 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும், சுத்திகரிக்கப்பட்ட நீரை பெருங்குடிக்கு அனுப்ப புதிய குழாய் பதிக்கும் பணிக்கும் என ரூ.25 கோடியே 50 லட்சம் ஒதுக்கப்பட்டது.இந்த பணிகளின் தொடக்க விழா ஆதம்பாக்கத்தில் நடந்தது. விழாவுக்கு சென்னை குடிநீர் வாரிய ஆலந்தூர் பகுதி பொறியாளர் விஜயகுமாரி தலைமை தாங்கினார். ஆலந்தூர் வட்டார பொறியாளர்கள் வெங்கடேசன், சுபாஷினி, உதவி பொறியாளர் தனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியை ஆலந்தூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. தா.மோ.அன்பரசன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் நகரமன்ற துணைத்தலைவர் என்.சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த கூடுதல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டதும், ஆதம்பாக்கத்தில் இருந்து பெருங்குடி வரை 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிய குழாய் அமைத்து கழிவுநீர் வெளியேற்றப்படும். இதனால் மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று குடிநீர் வடிகால் அதிகாரிகள் தெரிவித்தனர்.

..நமது நிருபர்