நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மையல்ல ; வதந்தியை பரப்பினால் கடும் நடவடிக்கை.! – தேசிய தேர்வு முகமை விளக்கம்

Scroll Down To Discover
Spread the love

இளநிலை மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக 15.06.2020 தேதியிட்டு சமூக ஊடகங்களிலும், பிற ஆதாரங்களிலும் வெளியான தகவல் போலியானது என தேசிய தேர்வு முகமை தெளிவுபடுத்தியுள்ளது.

இது குறித்து விளக்கம் அளித்து உள்ள தேசிய தேர்வு முகமை :- இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ள தேசிய தேர்வு முகமை, விண்ணப்பதாரர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களை திசைதிருப்பும் வகையில், இதுபோன்ற போலியான அறிவிப்புகள் எங்கிருந்து, யாரால் வெளியிடப்பட்டன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளது. இதுபோன்ற தகவல்களைப் பரப்பும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தேசிய தேர்வு முகமை அல்லது சம்பந்தப்பட்ட அமைப்புகளால் இதுபோன்ற முடிவு எதுவும் இதுநாள்வரை எடுக்கப்படவில்லை என்றும், அனைத்து விண்ணப்பதாரர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இதுபோன்று திசைதிருப்பக்கூடிய தகவல்கள் குறித்து பொதுமக்கள் கவனமாக இருப்பதுடன், தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான www.nta.ac.in மற்றும் ntaneet.nic.in ஆகியவற்றில் வெளியாகும் தகவல்களை மட்டும் அதிகாரப்பூர்வமாக எடுத்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தேசிய தேர்வு முகமையால் கடைசியாக 11 மே 2020 அன்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பை, தேர்வு முகமையின் https://data.nta.ac.in/Download/Notice/Notice 20200511063520 என்ற இணையதளத்தில் பி.டி.எப் வடிவில் பெற்றுக் கொள்ளலாம்.
எனவே, விண்ணப்பதாரர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் சாதாரண பொதுமக்கள், www.nta.ac.in ntaneet.nic.in-ல் வெளியாகும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டும் சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.